வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: திங்கள், 24 அக்டோபர் 2016 (14:32 IST)

ஜெயலலிதா கையெழுத்து: புயலை கிளப்ப திமுக, பாஜக ஆயத்தம்?

ஜெயலலிதா கையெழுத்து: புயலை கிளப்ப திமுக, பாஜக ஆயத்தம்?

தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய மூன்று தொகுதிகளுக்கும் வரும் நவம்பர் 19-ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. வருகிற 26-ஆம் தேதி இதற்கான வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டு நவம்பர் 3-ஆம் தேதி வேட்புமனு பரிசீலனை நடைபெற உள்ளது.


 
 
அப்போது திமுக, பாஜக ஆகிய கட்சிகள் அதிமுகவுக்கு எதிராக ஒரு முக்கிய பிரச்சனையை கிளப்ப இருப்பதாக தகவல்கள் வருகின்றன. வேட்புமனு தாக்கலின் போது கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளர்கள், கட்சி தலைவரின் கையொப்பமிட்ட விண்ணப்பத்தை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்க வேண்டும்.
 
அந்த விண்ணப்பத்தில் கட்சியின் தலைவர் இங்க் மையால் கையொப்பமிட்டிருக்க வேண்டும். இந்த காரணத்தை வைத்து தான் பிரச்சனை எழுப்ப உள்ளன இந்த கட்சிகள். அதிமுக தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையில் அவருக்கு பிஸியோ தெரபி சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது. அவர் கையெழுத்து போடும் அளவுக்கு உடல் நலத்துடன் இருக்கிறாரா என தெரியவில்லை.
 
எனவே வேட்புமனு பரிசீலனையின் போது அது ஜெயலலிதாவின் கையெழுத்து இல்லை என பிரச்சனை எழுப்ப உள்ளனர். அவ்வாறு அது நிரூபணமாகி விட்டால் அதிமுக வேட்பாளர் போட்டியிட முடியாது. இதற்கு மாற்று ஏற்பாடாக அதிமுக என்ன செய்யபோகிறது. திமுக, பாஜக கட்சிகளை எப்படி சமாளிக்க போகிறது என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
 
இந்த கையெழுத்து பிரச்சனையை ஏற்கனவே அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பா எழுப்பியிருந்த நிலையில், திமுக, பாஜக போன்ற கட்சிகள் வேட்புமனு தாக்கலின் போது இந்த கையெழுத்து பிரச்சனையை மீண்டும் எழுப்பினால் அது அதிமுகவுக்கு நெருக்கடியாகவே இருக்கும்.