வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Updated : செவ்வாய், 28 அக்டோபர் 2014 (09:58 IST)

திமுக ஆட்சிதான் என்றைக்கும் மக்கள் ஆட்சியாக இருக்கும்: மு.க.ஸ்டாலின் பேச்சு

திருவாரூர் மாவட்ட திமுக பொது உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டத்தில், திமுக ஆட்சிதான் என்றைக்கும் மக்கள் ஆட்சியாக இருக்கும் என்று மு.க.ஸ்டாலின் கூறினார்.
 
இது குறித்து திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூட்டத்தில் பேசியதாவது:–
 
கட்சி ஆய்வு கூட்டம் காலை தொடங்கி இரவு வரை நடைபெற்றது. இதில் கட்சியின் பல்வேறு அணிகளை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ஆய்வு கூட்டத்தில் கலந்து கொள்ள குறிப்பிட்டவர்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டது. இதற்காக யாரும் வருத்தப்பட வேண்டாம்.
 
ஆய்வு கூட்டத்தின்போது கட்சி சாராத மாணவர்களிடம் கருத்து கேட்கப்பட்டது. இதில் சமச்சீர் கல்விக்கு காரணமான திமுக தான் என்றைக்கும் மக்கள் ஆட்சியாக இருக்கும், எங்களுக்கும் அந்த ஆட்சிதான் அமைய வேண்டும் என்றும், எனவே வருகிற தேர்தலில் எங்கள் வாக்கு திமுக விற்குதான் எனவும் மாணவர்கள் தெரிவித்தனர்.
 
இளைஞர் அணி சார்பில் 144 தடை உத்தரவு காரணமாகத்தான் திமுக நாடாளுமன்ற தேர்தலில் தோற்றது என்று கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இது முற்றிலும் உண்மைதான்.
 
சாதி, மத கலவரம் ஏற்பட்டால் தான் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படும். ஆனால் தேர்தலுக்காக தமிழகத்தில் முதல் முறையாக அதுவும் தேர்தலுக்கு முதல் நாள் 144 தடை உத்தரவினை மாநில தேர்தல் ஆணையம் பிறப்பித்தது.
 
அதிக கலவரம் ஏற்படும் உத்திர பிரசேதம், மேற்குவங்கம், காஷ்மீர் போன்ற மாநிலங்களில் கூட 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை. ஆனால் தமிழகத்தில் மட்டும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதுதான் திமுகவின் தோல்விக்குக் காரணமாக அமைந்தது.
 
தடை உத்தரவு போட வேண்டும் என்று திமுக கேட்கவில்லை. இதே போல் தமிழகத்தில் எந்த கட்சியும் கேட்கவில்லை. தேசிய கட்சியான பாஜக கூட கேட்கவில்லை. ஏன் ஆளும் கட்சியான அதிமுக கூட கேட்கவில்லை.
 
பின்னர் எதற்கு தடை உத்தரவு? தேர்தலில் திமுக சில கட்சிகளுடன் கூட்டணி அமைத்தது. ஆனால் அதிமுக தேர்தல் கமிஷனோடு கூட்டணி வைத்ததால்தான் வெற்றி பெற்றது.
 
எனவே தான் மாநில தேர்தல் அதிகாரியை மாற்ற வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையத்திற்கு திமுக கோரிக்கை வைத்தது. தற்போது கூட இந்த கோரிக்கை நிறைவேறும் வகையில் பிரவீன்குமார் மாற்றப்பட்டதாக செய்தி வந்துள்ளது. இது திமுக விற்கு கிடைத்த வெற்றியாகும்.
 
தமிழகத்தில் முதலமைச்சராக ஜெயலலிதா இருந்தபோது காட்சி ஆட்சி தான் நடைபெற்றது. ஆனால் தற்போது பொம்மை ஆட்சி நடந்து வருகிறது. ஆட்சிக்கு வந்து 3 ஆண்டு காலத்தில் 3 முறை பால் விலையை அதிமுக அரசு உயர்த்தி உள்ளது.
 
ஆனால் திமுக ஆட்சியில் பால் விலை, பஸ் கட்டணம், மின்கட்டணம் எதுவும் உயர்த்தப்படவில்லை. பஸ் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று அந்த துறையின் அதிகாரி தெரிவித்தபோது கூட அரசு போக்குவரத்து கழகம் என்பது மக்கள் போக்குவரத்து கழகமாகும். எனவே அந்த துறையில் ஏற்படும் நஷ்டத்தை அரசே ஏற்று கொள்ளும் என அன்றைய முதலமைச்சர் கருணாநிதி தெரிவித்தார்.
 
திருவாரூரில் நடைபெறும் கட்சியின் ஆய்வு கூட்டத்தில் கலந்து கொள்ள செல்கிறேன் என்று தலைவர் கருணாநிதியிடம் தெரிவித்தேன். அப்போது திருவாரூரில் இடிந்த கமலாலய குளத்தின் மதில் சுவரையும், மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களையும் நேரில் சென்று பார்த்து வருமாறு என்னிடம் கூறினார்.
 
காலை 11 மணி அளவில் தொலைபேசி மூலம் இதுகுறித்த தகவல்களை என்னிடம் கேட்டறிந்த திமுக தலைவர் கருணாநிதி, முடிந்தால் அதிகாரிகளை சந்தித்து என் சார்பில் மனு அளிக்குமாறு கூறினார். எனவே ஆய்வு கூட்டத்தின் இடையே கலெக்டரை சந்தித்து நேரடியாக மனு அளித்தேன்.
 
பால் விலை உயர்வை கண்டித்து வருகிற 3 ஆம் தேதி மாவட்ட தலைநகரங்களில் போராட்டம் நடைபெறும் என கருணாநிதி அறிவித்துள்ளார். எனவே ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மக்களை பற்றியும், நாட்டை பற்றியும் சிந்திக்கும் ஒரே தலைவர் கருணாநிதிதான்.
 
வருகிற சட்டமன்ற தேர்தலில் திமுக மகத்தான வெற்றி பெறுவதற்கான எழுச்சி தற்போதே நிலவி வருகிறது. 6ஆவது முறையாக திமுக தலைவர் கருணாநிதி முதலமைச்சராக அமர்வதற்கு அனைவரும் பாடுபட வேண்டும்.'' என்று மு.க. ஸ்டாலின் கூறினார்.