1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : வெள்ளி, 10 பிப்ரவரி 2017 (01:39 IST)

பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு இல்லை - பின்வாங்கும் மு.க.ஸ்டாலின்

தமிழகத்தில் ஏற்பட்டுள்ள பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், ஆட்சியை நடத்தப்போவது ஓ. பன்னீர்செல்வமா? அல்லது சசிகலாவா? என்பதே எல்லோரின் எதிர்பார்ப்பாக மாறியுள்ளது.


 

இந்நிலையில், ஓ.பி.எஸ் பக்கம் சாய்ந்து விடக்கூடாது என்பதற்காக, அதிமுக எம்.எல்.ஏக்கள் மூன்று குழுவாக பிரிக்கப்பட்டு, பேருந்தில் ஏற்றப்பட்டு, சென்னையில் உள்ள பல்வேறு இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய திமுக துணை பொதுச்செயலாளர்களில் ஒருவரான சுப்புலட்சுமி ஜெகதீசன் திமுக உறுதியாக ஓ.பி.எஸ்க்கு ஆதரவு அளிக்கும் என தெரிவித்தார். ஏற்கனவே சட்டமன்ற அவைக்குள்ளாகவே ஓ.பி.எஸ்க்கு ஆதரவு அளிப்போம் என துரைமுருகன் கூறியிருந்தார்.

இந்நிலையில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள் அறிக்கையில், “திமுக துணை பொதுச் செயலாளர்களில் ஒருவரான சுப்புலட்சுமி ஜெகதீசன் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆட்சியமைக்க திராவிட முன்னேற்றக் கழகம் நிபந்தனையற்ற ஆதரவு அளிக்கும் என்று அளித்த பேட்டி திராவிட முன்னேற்ற கழகத்திற்கு உடன்பாடு இல்லாதது.

தற்போது தமிழகத்தில் நிலவும் அசாதாரண சூழ்நிலையில் திமுக எடுக்கப்பட வேண்டிய நிலை குறித்து தலைவர், பொதுச் செயலாளர் ஆகியோர் தான் உரிய நேரத்தில் உரிய ஆலோசனை நடத்தி முடிவு எடுப்பார்கள். அதற்கிடையில் கழக நிர்வாகிகள் யாரும் தனிப்பட்ட முறையில் இது மாதிரி கருத்துகள் எதையும் வெளியிடக் கூடாது என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்’’ என்று தெரிவித்துள்ளார்.

சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றால் திமுக, ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு அளிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஸ்டாலின் இந்த திடீர் அறிவிப்பு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.