வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : வெள்ளி, 13 மே 2016 (15:31 IST)

திமுகவும், அதிமுகவும் ஜெகதால கில்லாடிகள் - வைகோ

திமுகவும், அதிமுகவும் டாஸ்மாக் வியாபாரத்தில் ஜெகதால புரட்டல் பேர்வழிகள் என்று மதிமுக பொதுச்செயலாளரும், மக்கள் நலக் கூட்டணி ஒருங்கிணைப்பாளருமான வைகோ கூறியுள்ளார்.
 

 
தேமுதிக - மக்கள் நலக் கூட்டணி - தமாகா அணியின் மாபெரும் மாற்று அரசியல் வெற்றிக் கூட்டணி மாநாடு திருச்சியில் புதனன்று நடைபெற்றது.
 
மாநாட்டில் பேசிய வைகோ, “ஆந்திராவில் 92.17 சதவீத விவசாயிகள் கடன் பெற்றிருந்தனர். தெலுங்கானாவில் 89.9 சதவீத விவசாயிகள் கடன் பெற்றிருந்தனர். இவர்களது கடன்களை அம்மாநில முதல்வர்கள் தள்ளுபடி செய்துள்ளனர்.
 
தமிழகத்தில 82.1. சதவீத விவசாயிகள் கடன் பெற்றுள்ளனர். அவர்களது கடன்கள் தள்ளுபடி செய்யப்படும். விவசாயிகள் கந்துவட்டிக்காரர்களிடம் கடன் பெறுவது முற்றாக தடுக்கப்படும்.
 
திமுகவும், அதிமுகவும் டாஸ்மாக் வியாபாரத்தில் ஜெகதால புரட்டல் பேர்வழிகள். அதிமுக ஆட்சியில் 24 ஆயிரம் கோடிக்கு திமுக பிரமுகர்களுக்கு சொந்தமான ஆலையில் இருந்து டாஸ்மாக் சரக்குகள் விற்கப்பட்டது. இதற்கு 15 சதவீத கமிஷன் திமுக தரப்பில் பெற்றுக்கொள்ளப்பட்டது.
 
திமுக ஆட்சியில் 20 ஆயிரம் கோடிக்கு அதிமுக பிரமுகர்களுக்கு சொந்தமான ஆலையிலிருந்து டாஸ்மாக் சரக்குகள் விற்கப்பட்டது. இதற்கு அதிமுக தரப்பிலிருந்து 15 சதவீத கமிஷன் பெற்றுக்கொள்ளப்பட்டது. கூட்டணி ஆட்சி அமைந்தவுடன் டாஸ்மாக் பூட்டப்படும்.
 
பிரதமர் மோடி தேர்தல் பிரச்சாரம் செய்துள்ளார். அவரை கணக்கில் கொள்ளவேண்டாம். மோடி, அதானி குழுமத்திற்கும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் ஏஜெண்ட்டாக செயல்படுகிறார். விவசாயிகளுக்கும், வியாபாரிகளுக்கும் மோடிபச்சைத் துரோகம் செய்துவிட்டார்.
 
பணம் கொடுத்து வாக்குகளைப் பெறுவதற்காக அதிமுக தொகுதிக்கு ரூ.10 கோடியும், திமுக தொகுதிக்கு ரூ.8 கோடியும் அனுப்பியுள்ளன. வாக்களிக்க பணம் வாங்கக் கூடாது என இளம் வாக்காளர்கள் அவர்களது தாய், தந்தையர் மற்றும் உறவினர்களிடம் கூற வேண்டும். பிள்ளைகள் சொன்னால் பெற்றவர்கள் கேட்பார்கள்" என்று கூறியுள்ளார்.