தமிழக விவசாயிகளின் நிலை குறித்து வெள்ளை அறிக்கை வேண்டும்: விஜயகாந்த்

Mahalakshmi| Last Modified திங்கள், 20 ஜூலை 2015 (10:31 IST)
தமிழக விவசாயிகளின் இன்றைய நிலை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

இந்திய அளவில் தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் தகவல்படி தற்கொலை செய்துகொள்பவர்கள் எண்ணிக்கையில் தமிழகம் 2-வது இடத்திலும், கடன் தொல்லை தாளாமல் தற்கொலை செய்துகொள்ளும் விவசாயிகளின் எண்ணிக்கையில் 4-வது இடத்திலும் உள்ளது என்பது மிகுந்த வேதனைக்குரியது.
தமிழக விவசாயிகள், விவசாயத்தில் ஏற்படும் நஷ்டத்தை ஈடுகட்ட வழி தெரியாமல், அதற்காக வாங்கிய கடனுக்கு பதில் சொல்ல முடியாமலும் தற்கொலை செய்துகொள்கிறார்கள். அதோடு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய பயிர் கடனையோ, பயிர் காப்பீட்டுத் திட்டத்தையோ அவர்களுக்கு பலனளிக்கும் வகையில் ஆக்கப்பூர்வமாக செயல்படுத்தாத இந்த அரசை வன்மையாக கண்டிக்கிறேன்.

இதோடு மக்களின் வாழ்வாதாரமான நீர் நிலைகளையும், ஏரிகளையும் பொதுப்பணித்துறை மூலம் அரசு கபளீகரம் செய்வது கண்டனத்திற்குரியது. உயிர்கள் அனைத்திற்கும் தண்ணீர்தான் ஜீவாதாரமாகும். ஏரிகளையும், நீர்நிலைகளையும் முறையாக இந்த அரசு பராமரிக்காததால், பொது நீர் நிலைகளில் இருந்து மக்களுக்கு குடிதண்ணீர் மற்றும் விவசாயத்திற்கு போதுமான நீர் இன்றி தமிழகம் தவியாய் தவிக்கிறது.
நீர் நிலைகளை காப்பாற்றி மக்களை காக்க வேண்டிய இந்த அரசே அவற்றை அழிப்பதில் அசுரவேகம் காட்டுவது எந்த விதத்தில் நியாயம். இனிமேலாவது இதுபோன்ற செயல்களில் ஈடுபடாமலும், விவசாயிகளை தற்கொலையில் இருந்து காப்பாற்றவும் இந்த அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்வதோடு, தமிழக விவசாயிகளின் இன்றைய நிலை குறித்து இந்த அரசு வெள்ளை அறிக்கை கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு விஜயகாந்த் கூறியுள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :