தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போச்சு : தேமுதிக, மதிமுக நிம்மதி
கட்சிகளுக்கு அங்கீகாரங்கள் அளிப்பது தொடர்பான பரிசீலனைக் காலத்தை 5 ஆண்டுகளில் இருந்து 10 ஆண்டுகளாக தேர்தல் ஆணையம் அதிகரித்துள்ளதை அடுத்து தமிழகத்தில் தேமுதிக, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் அங்கீகாரம் ரத்து செய்வதில் இருந்து தப்பி உள்ளது.
தேர்தல் விதிமுறைகளின் படி, அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் 5 ஆண்டுகள் தொடர்ந்து செயல்படும் கட்சிகளாக இருக்க வேண்டும். இதுதவிர்த்து அண்மையில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் 30 உறுப்பினர்களுக்கு ஒருவர், அதாவது ஒரு எம்எல்ஏ வெற்றி பெற்றிருக்க வேண்டும். அதன்படி, தமிழகத்தில் 234 உறுப்பினர்களில் 7 அல்லது 8 எம்எல்ஏக்களை பெற்றிருக்க வேண்டும்.
இல்லையெனில், சமீபத்தில் பதிவான மொத்த வாக்குகளில் அந்தக் கட்சி பெற்ற வாக்கு 6 சதவிகிதத்திற்கும் மேல் இருக்க வேண்டும். ஆனால், நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தேமுதிக 2 புள்ளி 4 சதவிகித வாக்குகளை அதாவது 10 லட்சத்து 34ஆயிரத்து 384வாக்குகளை மட்டுமே பெற்றிருக்கிறது.
ஆகவே, அந்த கட்சியின் அங்கீகாரத்தை ரத்து செய்வது பற்றி தேர்தல் ஆணையம் பரிசீலித்து வருவதாகக் கூறப்பட்டது. அங்கீகாரம் ரத்தானால், அந்தக் கட்சியின் முரசு சின்னமும் அக்கட்சிக்கு நிரந்தரமாக கிடைப்பது சந்தேகம் தான் எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில், அரசியல் கட்சிகளுக்கு மாநில மற்றும் தேசிய கட்சி என்ற அங்கீகாரங்கள் அளிப்பது தொடர்பான பரிசீலனைக் காலத்தை 5 ஆண்டுகளில் இருந்து 10 ஆண்டுகளாக தேர்தல் ஆணையம் அதிகரித்துள்ளது.
இனி ஒரு தேர்தலில் குறிப்பிட்ட கட்சி மிக மோசமான தோல்வியைச் சந்தித்து வாக்கு சதவீதத்தை இழந்தாலும் உடனடியாக அதன் அங்கீகாரம் ரத்தாகாது. தொடர்ந்து 2 தேர்தல்களில் படுதோல்வியடைந்தால் மட்டுமே அந்தக் கட்சியின் தேசிய மற்றும் மாநில கட்சி அங்கீகாரங்கள் பறிபோகும்.
தொடர்ந்து 2 லோக்சபா தேர்தல்களிலோ அல்லது அடுத்தடுத்த சட்டசபை தேர்தல்களிலோ மிக மோசமான தோல்வியைத் தழுவினால் மட்டுமே கட்சிகளின் அங்கீகாரம் இனி பறிக்கப்படும். இதனால், தேமுதிக, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் அங்கீகாரம் ரத்து செய்வதில் இருந்து தப்பி உள்ளது.