1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Modified: புதன், 28 அக்டோபர் 2015 (11:31 IST)

பண்டிகைக்கால பணப்பலனை உடனடியாக வழங்க வேண்டும்: ஜி.கே.வாசன் வேண்டுகோள்

தீபாவளிக்கு முன்னதாகவே பண்டிகை கால பணப்பலனை வழங்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.


 

 
இது குறித்து ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
 
தமிழக அரசு போக்குவரத்து கழகங்களில் சுமார் ஒரு லட்சத்து 50 ஆயிரம் தொழிலாளர்கள் பணிபுரிகிறார்கள்.
 
தமிழகத்தில் அரசு போக்குவரத்துக்கழக பணியாளர்களின் ஊதிய உயர்வு, பணி நிரந்தரம், ஓய்வூதியம், போனஸ் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை அரசு நிறைவேற்றும் என்ற நம்பிக்கையில் தொழிலாளர்கள் காத்திருக்கிறார்கள்.
 
குறிப்பாக தற்காலிக மற்றும் ஒப்பந்த பணியாளர்களை பணி நிரந்தரம் செய்வது, ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய காப்பீட்டு தொகை, ஊதிய உயர்வு தொகை, பணிக்கொடை பணப்பலன்கள் வழங்குவது, ஆண்டு தோறும் வழங்கப்படும் போனஸ் தொகை வழங்குவது போன்ற பல்வேறு கோரிக்கைகளை தமிழக அரசு கருத்தில் கொண்டு அவைகளை நிறைவேற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 
இன்றைய பொருளாதார சூழலை கவனத்தில் கொண்டு அரசு போக்குவரத்தில் பணியாற்றும் ஊழியர்கள் தீபாவளிப் பண்டிகைக்கு தேவையான பொருட்களை பண்டிகை தினத்திற்கு முன்பாகவே வாங்கி பயன்பெற ஏதுவாக அவர்களுக்கு பண்டிகைக்கால பணப்பலனை உடனடியாக வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.