குக்கிங் சேனல் தாத்தாவுக்கு உதவ மறுத்தாரா ராகுல்காந்தி? – வில்லேஜ் குக்கிங் சேனல் விளக்கம்!
பிரபலமான வில்லேஜ் குக்கிங் சேனல் தாத்தாவுக்கு ராகுல்காந்தி மருத்துவத்திற்கு உதவி செய்ய மறுத்ததாக பரவி வரும் தகவல் குறித்து வில்லேஜ் குக்கிங் சேனல் விளக்கம் அளித்துள்ளது.
தமிழில் உணவு சார்ந்து நடத்தப்பட்டு வரும் இந்தியா முழுவதும் பிரபலமாக உள்ள யூட்யூப் சேனல் வில்லேஜ் குக்கிங் சேனல். தமிழில் 1 கோடி சப்ஸ்க்ரைபர்களை கடந்த சாதனை படைத்த இந்த சேனலை புதுக்கோட்டை அருகே உள்ள சின்ன வீரமங்கலம் கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் நடத்தி வருகின்றனர்.
கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது ராகுல்காந்தி தமிழகத்தில் பயணித்தபோது இந்த சேனல் நபர்களை சந்தித்து அவர்களோடு சமையல் நிகழ்ச்சியிலும் கலந்துக்கொண்டு சாப்பிட்டார். அதன்மூலம் இந்த சேனல் மேலும் பேமஸ் ஆனது.
சமீபத்தில் இந்த சேனலின் முக்கியமான சமையற்காரரான பெரியதம்பி என்கிற தாத்தா உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அப்போது ராகுல்காந்தியிடம் மருத்துவசெலவுகளுக்கு உதவிக்கேட்டதாகவும், அதற்கு அவர் உதவி செய்ய மறுத்துவிட்டதாகவும் ஒரு தகவல் உலா வந்து வைரலானது.
இதை வில்லேஜ் குக்கிங் சேனல் மறுத்துள்ளனர். இதுகுறித்து பேசிய சேனலின் நிர்வாகி சுப்ரமணியன் “எங்களது வளர்ச்சிக்கு உதவிய அன்பான மனிதன் ராகுல் அண்ணாவின் மீது இப்படி எங்களையே பயன்படுத்தி அவதூறு பரப்புவது மன வருத்தத்தை அளிக்கிறது. இப்படி பொய் செய்திகளை பரப்புபவர்கள் மீது கட்சி தலைமை நடவடிக்கை எடுத்து இதனை கட்டுப்படுத்த வேண்டும்” என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
Edit by Prasanth.K