திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 29 செப்டம்பர் 2023 (17:41 IST)

டெங்கு காய்ச்சல்: திமுக அரசுக்கு எனது கடும் கண்டனங்கள்!-எடப்பாடி பழனிசாமி

edapadi palanisamy
டெங்கு போன்ற விஷக் காய்ச்சலை தொடர்ந்து பரவாமல் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளாத விடியா திமுக அரசுக்கு எனது கடும் கண்டனங்கள் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தன் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளதாவது:
 
மதுரையில், ஒரே நாளில் 7 குழந்தைகள் உள்ளிட்ட 15 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கடந்த இரண்டு வாரத்தில் மட்டும் 50-க்கும் மேற்பட்டோர் #டெங்குகாய்ச்சல் பாதிப்புக்குள்ளாகி சிகிச்சை பெற்று வருகின்றனர்
 
கும்பகோணம் அரசு பொது மருத்துவமனையில் 11 நபர்களுக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது 45 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
 
இதேபோல், சென்னை, திருச்சி, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், விருதுநகர், தஞ்சாவூர், சேலம், ஈரோடு, கோவை போன்ற மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலும் #டெங்குகாய்ச்சல் அதிகரித்து வருவதால், பொதுமக்கள் பெரும் அச்சத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
 
சுகாதாரத் துறையை கையில் வைத்துள்ள அமைச்சரின் மெத்தனப் போக்காலும், அலட்சியப் போக்காலும், துறை பற்றிய புரிதல் இல்லாததாலும் பொதுமக்கள், குறிப்பாக குழந்தைகள் டெங்கு காய்ச்சலால் பாதிப்படைந்து, உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இனியாவது விடியா திமுக அரசு விழித்துக்கொண்டு அப்பாவி மக்களின் உயிரைக் காக்க சிறப்பு மருத்துவ முகாம்கள் மற்றும் விழிப்புணர்வு முகாம்களை நடத்த வேண்டும் என்று இந்த மக்கள் விரோத விடியா திமுக அரசை வலியுறுத்துவதோடு, தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் டெங்கு காய்ச்சலுக்கென்று தனிப் பிரிவு அமைத்து சிறப்புப் பணியாளர்களை பணியமர்த்திட வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.