ஃபாசிச பாஜக அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்- திருமாவளவன்
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு நாடு முழுவதும் சிஏஏ சட்டம் அமலுக்கு வருவதாக அறிவித்தது. பாஜக அரசு அறிவித்தபடி, நேற்று சிஏஏ சட்டம் அரசிதழில் வெளியானதாக அறிக்கை வெளியிடப்பட்டு அமலுக்கு வந்துள்ளது.
இதற்கு காங்கிரஸ், திமுக, தமிழக வெற்றிக் கழகம், விசிக உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இந்த நிலையில்,இது மதத்தின் பெயரால் மக்களின் நல்லிணக்கத்தைச் சீர்குலைக்கும் பெரும் கேடான முயற்சி.
வங்கதேசம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் சமூகப் பிளவை உருவாக்கி அமைதியைச் சிதைத்து அரசியல் ஆதாயம் தேடும் அற்ப முயற்சி.
மோடி அரசின் இத்தகைய சிறுபான்மையின விரோத போக்கை விசிக சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம் என்று நேற்று கருத்து தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், ஃபாசிச பாஜக அரசைக் கண்டித்து... அனைத்து மாவட்டத் தலைநகரங்களில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெறும் என இன்று அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தெரிவித்துள்தாவது:
''குடியுரிமைத் திருத்தச் சட்டத்தின்(CAA) மூலம் மதச் சார்பின்மையை சிதைக்கும், மதத்தின் பெயரால் மக்களைப் பிளவுபடுத்தும், இசுலாமியர்களுக்கு எதிரான வெறுப்பைத் தீவிரப்படுத்தும், இதன்வழி அரசியல் ஆதாயம் தேடும் - ஃபாசிச பாஜக அரசைக் கண்டித்து... அனைத்து மாவட்டத் தலைநகரங்களில் 15.03.2024 வெள்ளிக்கிழமை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. அனைத்து சனநாயக சக்திகளும் பங்கேற்கும் வகையில் இவ்வார்ப்பாட்டம் ஒருங்கிணைக்கப்படும்''என்று தெரிவித்துள்ளார்.