ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : வெள்ளி, 13 செப்டம்பர் 2024 (14:17 IST)

அதிமுக தொடர்ந்த அவதூறு வழக்கு.! நீதிமன்றத்தில் ஆஜரான சபாநாயகர் அப்பாவு..!!

அதிமுக சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அவதூறு வழக்கில், தமிழக சட்டமன்ற சபாநாயகர் அப்பாவு, சென்னை எம்பி - எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார்.  
 
சென்னையில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய சபாநாயகர் அப்பாவு, ஜெயலலிதா மரணம் அடைந்த நேரத்தில் 40 அதிமுக எம்எல்ஏக்கள் திமுகவில் இணைய தயாராக இருந்ததாகவும், அதை திமுக தலைவர் ஸ்டாலின் ஏற்க மறுத்து விட்டதாகவும் கூறியிருந்தார்.
 
இது அதிமுக எம்எல்ஏக்களுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் இருப்பதாக கூறி சபாநாயகர் அப்பாவுக்கு எதிராக அதிமுக வழக்கறிஞர் அணி இணைச் செயலாளர் பாபு முருகவேல் அவதூறு வழக்கை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு எம்.பி. எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ஜி.ஜெயவேல் முன்  விசாரணைக்கு வந்தபோது  சபாநாயகர் அப்பாவு நேரில் ஆஜரானார். 
 
நீதிமன்ற சம்மனை பெற மறுத்து விட்டதாக கூறியது தவறு எனவும், நீதிமன்ற சம்மன் ஏதும் வரவில்லை எனவும், நீதிமன்றத்தின் மீது தனக்கு மிகுந்த மரியாதையும், நம்பிக்கையும் உள்ளதாகவும், இதுசம்பந்தமாக விசாரிக்க வேண்டும் எனவும் நீதிபதியிடம் சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார். 

 
பின்னர், வழக்கின் விசாரணையை செப்டம்பர் 26ம் தேதிக்கு நீதிபதி ஜெயவேல் தள்ளி வைத்தார்.