வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: வெள்ளி, 21 ஆகஸ்ட் 2015 (13:46 IST)

"நான்காண்டுகளில் 150 அவதூறு வழக்குகளைத் தொடர்ந்ததுதான் அதிமுகவின் சாதனை" - மு.க.ஸ்டாலின்

நான்காண்டுகளில் ஏறத்தாழ 150 அவதூறு வழக்குகளைத் தொடர்ந்ததன் மூலம் புதிய சாதனையையே அதிமுக அரசு நிகழ்த்தி இருக்கிறது என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
 
இது குறித்து மு.க.ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், "அதிமுக பொதுச் செயலாளர் அம்மையார் ஜெயலலிதா தலைமையிலான சர்வாதிகார ஆட்சியில் சகிப்புத்தன்மைக்குக் கிஞ்சிற்றும் இடமில்லை. ஆட்சியின் அலங்கோலங்கள், ஊழல்கள், நிர்வாகத்தின் தோல்விகளை விமர்சிக்கும் எதிர்க்கட்சிகளையும் ஊடகங்களையும் அவதூறு வழக்குகளைத் தொடர்ந்து அச்சுறுத்துவது எல்லை மீறிப் போய்க் கொண்டிருக்கிறது.
 
மக்கள் நலக் கண்ணோட்டத்தில் அதிமுக அரசின் தவறுகளைச் சுட்டிக் காட்டி வரும் தலைவர் கலைஞர் மீதும் என் மீதும் கூட அவதூறு வழக்குகள் தொடரப்பட்டிருக்கின்றன. அவற்றைக் கண்டு நாங்கள் அஞ்சவில்லை. கடந்த நான்காண்டுகளில் ஏறத்தாழ 150 அவதூறு வழக்குகளைத் தொடர்ந்ததன் மூலம் புதிய சாதனையையே அதிமுக அரசு நிகழ்த்தி இருக்கிறது.
 
அவதூறு வழக்குகளைத் தொடர்ந்ததில், அதிமுக ஆட்சியால் இந்தியாவிலேயே தமிழகம் தான் முதல் மாநிலம் என்பது கருத்துச் சுதந்திரத்திற்கு விடப்பட்ட சவாலாக இருக்கிறது. அரசின் செலவில், குற்றவியல் சட்டத்தின்கீழ் அவதூறு வழக்குகளைத் தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர்களையும். பத்திரிகையாளர்களையும் நீதிமன்றப் படிக்கட்டுகளை ஏறவைத்து அலைக்கழிப்பதன் மூலம் விமர்சனங்களை ஒடுக்கவும் அரசியல் ரீதியாக எதிர்ப்போரை அடக்கவும் அரசு நினைக்கிறது.
 
அரசை எதிர்த்து செய்திகளை வெளியிடக் கூடாது என ஊடகங்களை மிரட்டும் ஆயுதமாகவும் அவதூறு வழக்கை தமிழக அரசு கையாள்கிறது. பல்வேறு தரப்பினரின் பலத்த கண்டனங்களுக்குப் பிறகும் கூட அந்த வழக்குகளைத் திரும்பப் பெற்றுக் கொள்ள அரசு இதுவரை முன்வரவில்லை. ஆளுங்கட்சியினர் சட்டத்தைக் கையில் எடுத்துக் கொண்டு எந்த அராஜகத்திலும் ஈடுபடலாம்; அவர்கள் எதிர்கட்சித் தலைவர்களை தங்கள் மனம் போன போக்கில் அவதூறாக விமர்சிக்கலாம். அவர்கள் மீது நடவடிக்கை இருக்காது.
 
ஆனால், எதிர்க்கட்சிகள் ஜனநாயக ரீதியிலான கடமையைக் கூட செய்யக் கூடாது என்று அடக்குமுறை தர்பாரை கட்டவிழ்த்து விட்டுக் கொண்டிருக்கிறது. கடந்த காலங்களில் முதல்வர் ஜெயலலிதாவை விமர்சித்தார்கள் என்று தொடரப்பட்ட அவதூறு வழக்குகள், சம்பந்தப்பட்ட நபர்கள் அதிமுகவில் சேர்ந்ததும் சொத்தைக் காரணங்களைக் கூறி திரும்பப் பெறப்பட்டுள்ளது ஒன்றே, இந்த வழக்குகள் எல்லாம் அரசியல் உள்நோக்கத்துடன்தான் போடப்படுகின்றன என்பதற்கு உதாரணம்.
 
எப்போதெல்லாம் அதிமுக அரசு ஆட்சிக்கு வருகிறதோ அப்போதெல்லாம் அவதூறு வழக்குகளின் எண்ணிக்கையும், டாஸ்மாக் விற்பனையைப் போல விண்ணைத் தொடுவதைத் தமிழகம் பார்த்துக் கொண்டிருக்கிறது. பல்வேறு இடங்களில் ஆட்சியாளர்களால் அவதூறு வழக்கின் சட்டப் பிரிவுகள் தவறாகப் பயன்படுத்தப்படுவதை எதிர்த்து திரு விஜயகாந்த் அவர்கள், பாஜக தலைவர் டாக்டர் திரு சுப்பிரமணியன் சுவாமி அவர்கள், டெல்லி முதல்வர் திரு அரவிந்த் கெஜ்ரிவால் அவர்கள், நக்கீரன் திரு கோபால் உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்குகள் மீது உச்ச நீதிமன்றத்தில் விசாரணை நடந்து கொண்டிருக்கிறது.
 
அந்த அமர்விற்குத் தலைமையேற்கும் நீதியரசர் தீபக் மிஸ்ரா அவர்கள், `முதலமைச்சரை ஊழல்வாதி என்று குறிப்பிடுவதே அவதூறு என்றால் எதிர்க்கட்சிகள் எதையுமே விமர்சிக்க முடியாதே என்று வினவி இருக்கிறார். சொத்துக்குவிப்பு வழக்கில் ஆண்டுக்கணக்கில் விசாரணை நடந்தபோதிலும், அவ்வழக்கில் அவர் தண்டிக்கப்பட்ட நேரத்திலும் அவரை ஊழல்வாதி என்றும், அவர் தலைமையிலான அரசில் ஊழல் எல்லைமீறி நடக்கிறது என்றும் விமர்சிப்பது ஆரோக்கியமான ஜனநாயகத்தில் எதிர்க்கட்சிகளின் இயல்பான கடமை.
 
கொடநாட்டில் முதலமைச்சர் ஓய்வெடுக்கிறார். அறிக்கைகளின் மூலம் ஆட்சி செய்கிறார் என்ற சாதாரண விமர்சனத்துக்கே தேமுதிக தலைவர் திரு. விஜயகாந்த் அவர்கள் மீது முதல்வர் ஜெயலலிதா அவர்களால் அவதூறு வழக்குத் தொடரப்பட்டு அலைக்கழிக்கப்படுகிறார். தன் மீதான அவதூறு வழக்குகளை ரத்து செய்ய வேண்டுமென திரு விஜயகாந்த் அவர்கள் தொடர்ந்த வழக்கில், அதிமுக அரசுக்கு ஆதரவாக மத்திய அரசு எடுத்த நிலை வியப்பையும் வேதனையையும் தருகிறது" என்று கூறியுள்ளார்.