1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J.Durai
Last Modified: வியாழன், 30 நவம்பர் 2023 (11:34 IST)

விவசாய நிலங்கள் முறைகேடாக பத்திரப்பதிவு..? – சார்பதிவாளார் அலுவலகத்தை முற்றுகையிட்ட பார்வட் ப்ளாக் கட்சியினர்!

Forward Bloc
சார் பதிவாளர் அலுவலகத்தில் விவசாய நிலங்களை முறைகேடாக பத்திர பதிவு செய்து வருவதாக குற்றம் சாட்டி பார்வட் ப்ளாக் கட்சியினர் முற்றுகை போராட்டம்


 
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செல்லம்பட்டியில் அமைந்துள்ள சார் பதிவாளர் அலுவலகத்தில் செல்லம்பட்டியைச் சுற்றியுள்ள 20 க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பத்திர பதிவுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த பத்திர பதிவு அலுவலகத்தில் சார் பதிவாளராக பணியாற்றும் செல்வி என்பவர் விவசாய நிலங்களை ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்திடம் முறையாக அனுமதி கடிதம் பெறாமலும், முறைகேடாகவும் பத்திர பதிவுகளை செய்து வருவதாக குற்றம் சாட்டியும், மாலை 5 மணிக்கு மேல் இரவு வரை ரகசியமாக பத்திர பதிவுகளை மேற்கொண்டு வருவதாக குற்றம்சாட்டி தென்னிந்திய பார்வட் ப்ளாக் கட்சியின் தலைவர் திருமாறன் தலைமையிலான அக்கட்சியின் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் சார் பதிவாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தகவலறிந்து வந்த உசிலம்பட்டி டிஎஸ்பி நல்லு தலைமையிலான போலிசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

மேலும் இந்த சார் பதிவாளர் பத்திர பதிவு செய்ய லஞ்சம் பெற்றதாக கடந்த 3ஆம் தேதி லஞ்ச ஒழிப்பு போலிசாரால் கையும் களவுமாக பிடிபட்ட சூழலில் உடனடியாக அவர் விடுவிக்கப்பட்டு அதே அலுவலகத்தில் பணியாற்றி வருவதாகவும், முறைகேடாக பதிவு செய்த பத்திரங்களை ரத்து செய்ய நடவடிக்கை எடுப்பதோடு, சார் பதிவாளர் மீது துறை ரீதியான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என போராட்டக்குழுவினர் தெரிவித்தனர், நடவடிக்கைகள் இல்லாத நிலையில் அடுத்தடுத்து தொடர் போராட்டங்களும் நடத்தப்படும் என எச்சரிக்கை விடுத்தனர்.