மழைபாதிப்பில் இருந்து கடலூர் மாவட்டத்தை மீட்க வேண்டும்: ராமதாஸ்


K.N.Vadivel| Last Updated: திங்கள், 23 நவம்பர் 2015 (22:59 IST)
தொடர் மற்றும் கனமழை பாதிப்பில் இருந்து கடலூர் மாவட்டத்தை உடனே மீட்க தமிழக அரசு முன்வர வேண்டும் என பாமக கோரிக்கை விடுத்துள்ளது.
 
 
இது குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
 
தமிழகத்தில், கடலூர், விழுப்புரம் மற்றும் நாகை உள்ளிட்ட 15 மாவட்டங்களில் கடந்த இரு நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் தொடர் மழையால் பொது மக்களுக்கு கடும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, தொடர் கனமழையால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்ட மக்கள் இந்த மழையால் சொல்லமுடியாத துயரத்துக்கு ஆளாகியுள்ளனர்.
 
கடலூர் மாவட்டத்தில் தீபஒளி திருநாளுக்கு முன்பாக பெய்த அடைமழையால் அம்மாவட்டத்தைச் சேர்ந்த மக்களுக்கு இந்த தீபஒளி சோக தீபஒளியாக மாறியது. கடலூர் மாவட்டத்தில் ஐம்பதுக்கும் மேற்பட்டோர் உட்பட தமிழ்நாடு முழுவதும் 200-க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.
 
கடலூரைத் தொடர்ந்து சென்னை, காஞ்சி, திருவள்ளூர் மாவட்டங்களும் மழையால் கடும் பாதிப்புக்கு உள்ளாயின. இந்த பாதிப்புகளில் இருந்து கடலூர், சென்னை உள்ளிட்ட மாவட்டங்கள் மீண்டு வருவதற்கு முன்பே அடுத்த மழை தொடங்கி விட்டதால் அம்மாவட்டங்களில் மிக மோசமான பாதிப்புகள் ஏற்பட்டிருக்கின்றன.
 
கடலூர் மாவட்டத்தில் சனிக்கிழமை இரவு முதல் இடைவிடாமல் பெய்து வரும் மழையால் கெடிலம் ஆற்றிலும், பரவனாற்றிலும் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கிறது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் 30 ஆயிரத்திற்கும் அதிகமான வீடுகள் வெள்ளத்தால் சூழப்பட்டிருக்கின்றன. கடலூர் மாவட்டத்தில் எந்த பகுதியிலும் மழை நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்படவில்லை.
 
நிவாரணப் பணிகளை மேற்பார்வையிடுவதற்காக கடலூர் மாவட்டத்தில் முகாமிட்டிருந்த 5 அமைச்சர்களும் மீட்பு பணிகள் முடிவதற்கு முன்பாகவே அங்கிருந்து வெளியேறிவிட்டனர். நிவாரணப் பணிகளை மேற்பார்வையிடுவதற்கு பதிலாக தங்களுக்கும், தங்களின் ஆதரவாளர்களுக்கு கட்சிப் பதவிகள் கிடைத்த மகிழ்ச்சியை கொண்டாடிக் கொண்டிருக்கின்றனர்.
 


இதில் மேலும் படிக்கவும் :