நித்தியானந்தாவை இன்றே கைது செய்யுங்கள்: கடும் கோபமடைந்த நீதிபதி!

Last Modified திங்கள், 29 ஜனவரி 2018 (13:26 IST)
மதுரை ஆதீன மடாதிபதியாக நித்தியானந்தா பொறுப்பேற்றது தொடர்பான வழக்கில் பதில் மனு தாக்கல் செய்யாத நித்தியானந்தாவை கைது செய்ய உத்தரவு பிறப்பிக்க நேரிடும் என சென்னை உயர் நீதிமன்றம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
 
மதுரை ஆதீனத்தின் 292-வது ஆதீனமாக அருணகிரிநாதர் இருந்த போது 293-வது ஆதீனமாக நித்தியானந்தா அறிவிக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஜெகதலப் பிரதாபன் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.
 
சட்ட விரோதமாக நித்தியானந்தா நியமிக்கப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்ட இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்த நித்தியானந்தா தான் தான் 293-வது ஆதீனம் என அதில் குறிப்பிட்டிருந்தார். இதற்கு அதிருப்தி தெரிவித்த நீதிபதி மகாதேவன், 292-வது ஆதீனம் உயிரோடு இருக்கும் போது நீங்கள் புதிய ஆதீனமாக பெறுப்பேற்றது தவறு பதில் மனுவில் திருத்தம் செய்து தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டிருந்தார்.
 
ஆனால் இதில் பலமுறை வாய்தா வாங்கிய நித்தியானந்தா தரப்பு பதில் மனு தாக்கல் செய்யவே இல்லை. இந்நிலையில் இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மாற்றம் செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று நீதிபதி மகாதேவன் முன்னிலையில் மீண்டும் சென்னை உயர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.
 
அப்போது நித்தியானந்தா தரப்பு நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் பதில் மனு தாக்கல் செய்யாமல் இருப்பதால் நீதிபதி கோபமடைந்து கடும் கண்டனம் தெரிவித்தார். நித்தியானந்தாவை இன்றே கைது செய்து ஆஜர்படுத்த உத்தரவிடப்படும் என்றார் நீதிபதி.
 
இதனையடுத்து நித்தியானந்தா தரப்பு வழக்கறிஞர் நீதிபதியிடம் அவகாசம் கேட்டதையடுத்து வரும் பிப்ரவரி 2-ஆம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்யாவிடில் கைது உத்தரவு பிறப்பிக்க நேரிடும் என எச்சரித்தார். இதனையடுத்து இந்த வழக்கின் விசாரணை நாளை மறுநாள் ஒத்திவைக்கப்பட்டது.


இதில் மேலும் படிக்கவும் :