1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: புதன், 13 மே 2015 (19:31 IST)

'ஜெயலலிதாவிற்கு வழங்கப்பட்ட தீர்ப்பு திருத்தப்பட வேண்டும்' - ராமதாஸ்

ஜெயலலிதாவிற்கு வழங்கப்பட்ட தீர்ப்பு திருத்தப்பட்டால் தான் இந்தியாவைப் பீடித்துள்ள ஊழல் என்ற சாத்தானை ஒழிக்க முடியும் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
 
இது தொடர்பாக பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "வருவாய்க்கு மீறிய வகையில் சொத்துக்குவித்த வழக்கில் ஜெயலலிதாவை விடுதலை செய்து கர்நாடக உயர்நீதிமன்றம் அளித்தத் தீர்ப்பில் ஏராளமான ஓட்டைகள் இருப்பதை நேற்று வெளியிட்ட அறிக்கையில் சுட்டிக்காட்டியிருந்தேன்.
 

 
ஜெயலலிதா தரப்பினர் பெற்ற வங்கிக் கடன்களை அவர்களின்  வருவாயாக காட்டும் விஷயத்தில் ரூ.13.50 கோடி தவறுதலாக சேர்க்கப்பட்டதை சுட்டிக்காட்டியிருந்தேன். இதேகருத்தை இவ்வழக்கின் அரசு வழக்கறிஞர் பி.வி.ஆச்சார்யா உள்ளிட்டோரும் தெரிவித்துள்ளனர்.
 
இதேபோல் நீதிபதி குமாரசாமி அளித்தத் தீர்ப்பில் இன்னும் பல ஓட்டைகள் உள்ளன. அவற்றில் பல குறைபாடுகள் ஜெயலலிதா தரப்புக்கு சாதகம் என்ற அளவுடன் முடிந்து விட்டன. ஆனால், பல குறைகள் இந்தியாவில் ஊழலை ஒழிக்கும் முயற்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தக் கூடியவையாக  இருப்பது தான் கவலையளிக்கிறது.
 
உதாரணமாக உயர்நீதிமன்ற நீதிபதி குமாரசாமி அவரது தீர்ப்பு ஆணையின் 853 மற்றும் 854 ஆவது பக்கங்களில் ஜெயலலிதாவுக்கு வந்த பரிசுப் பொருட்களையும் அவரது வருமானமாக கருதி, அவரது வருவாய் கணக்கில் ரூ.1.50 கோடியை சேர்த்திருக்கிறார். இது ஜெயலலிதா செய்த ஊழல்களுக்கு அப்பட்டமாக அங்கீகாரம் அளிக்கும் மோசமான நடவடிக்கையாகும்.
 
‘‘இவ்வழக்கின் முதல் எதிரி ஜெயலலிதா தனக்கு ரூ.2.15 கோடி மதிப்புள்ள பரிசுப் பொருட்கள் வந்ததாகவும், ரூ.77 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு பணம் வந்ததாகவும் கூறியுள்ளார். ஜெயலலிதா அவரது பிறந்த நாளைக் கொண்டாடியுள்ளார். அவரது வளர்ப்பு மகனுக்கு திருமணம் செய்து வைத்துள்ளார். தமிழ்நாட்டில் அரசியல் தலைவர்களுக்கு அவர்களின் பிறந்த நாளில் பரிசுப் பொருட்கள் தருவது வழக்கமாக உள்ளது. அதனடிப்படையில் ஜெயலலிதாவுக்கு வந்த பரிசுப் பொருட்கள் மூலம் அவருக்கு ரூ.1.50 கோடி வருமானம் கிடைத்ததாக மதிப்பீடு செய்கிறேன்’’ என்று நீதிபதி குமாரசாமி தமது தீர்ப்பில் தெரிவித்திருக்கிறார். இதில் ஒரு விஷயம் மிகவும் கவனமாக தவிர்க்கப்பட்டிருக்கிறது.
 
அரசியல் கட்சித் தலைவர்கள் பிறந்த நாள் கொண்டாடுவதையோ அல்லது பிறந்த நாளின்போது தொண்டர்களிடமிருந்து பரிசுப் பொருட்களை வாங்குவதையோ யாரும் குறைகூற முடியாது. ஆனால், ஜெயலலிதா அரசியல் கட்சித் தலைவராக இந்த பரிசுப் பொருட்களை வாங்கவில்லை; முதலமைச்சராக இருந்து கொண்டு இந்த பரிசுகளை வாங்கியுள்ளார் என்பது தீர்ப்பு ஆணையில் மறைக்கப்பட்டிருக்கிறது.
 
அமைச்சர்களாக இருப்பவர்கள் எந்தவித பரிசுப் பொருட்களையும் வாங்கக் கூடாது என்று நடத்தை விதிகளில் கூறப்பட்டுள்ளது. அதைமீறி ஜெயலலிதா பரிசுகளை வாங்கியதே குற்றமாகும். இத்தகைய சூழலில் அந்த பரிசுகளை எப்படி வருவாயாக எடுத்துக் கொள்ள முடியும்? என்பது தெரியவில்லை.
 
அதுமட்டுமின்றி, ஜெயலலிதா விதிகளை மீறி பரிசுப் பொருட்களை பெற்றது தொடர்பாக அவர் மீது நடுவண் புலனாய்வுப் பிரிவு தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தின் விசாரணையில் உள்ளது. அவ்வாறு இருக்கும்போது ஜெயலலிதா சட்டவிரோதமாக வாங்கிய பரிசுப் பொருட்களை வருமானமாக அறிவித்து அதற்கு சட்டப்பூர்வ அந்தஸ்து வழங்கியிருப்பது மோசமான முன்னுதாரணமாக அமைந்து விடும். யார் வேண்டுமானாலும் எவ்வளவு வேண்டுமானாலும் ஊழல் செய்யலாம்; வழக்கு என்று வந்தால் அவை பரிசுப் பொருட்களாக கிடைத்தவை என்று கூறி தப்பித்து விடலாம் என்ற நிலையை இந்த தீர்ப்பு ஏற்படுத்திவிடும்.
 
ஊழல் மிகப்பெரிய சமூகத் தீமை என்பதை கருத்தில் கொண்டு இந்த வழக்கில் தீர்ப்பளிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியிருந்த போதிலும், நீதிபதி குமாரசாமி வழங்கிய தீர்ப்பு ஊழலை ஊக்குவிக்கும் வகையில் அமைந்திருப்பது துரதிருஷ்டவசமானது.
 
ஜெயலலிதாவும், அவரது கூட்டாளிகளும் தங்களின் சொத்துக்களுக்கு வருமானவரித் துறையிடம் கணக்கு காட்டியுள்ளனர்; அதை வருமான வரித்துறையும் ஏற்றுக்கொண்டிருக்கிறது என்பதை காரணம் காட்டியே ஜெயலலிதா தரப்பை அனைத்துக் குற்றச்சாற்றுகளில் இருந்தும் நீதிபதி விடுவித்துள்ளார்.
 
ஆனால், ஜெயலலிதா மீது சொத்துக்குவிப்பு வழக்குத் தொடரப்பட்ட பிறகே அவர் தமது சொத்துக்கள் குறித்த வருமானவரிக் கணக்கை காட்டினார் என்பதையும், இவ்விஷயத்தில் வருமானவரித் துறையின் முடிவு நீதிமன்றங்களை கட்டுப்படுத்தாது என்பதையும் நீதியரசர் ஏனோ கருத்தில் கொள்ளவில்லை.
 
மொத்தத்தில் நீதிபதி குமாரசாமி அளித்தத் தீர்ப்பு திருத்தப்பட வேண்டிய ஒன்றாகும். இத்தீர்ப்பு திருத்தப்பட்டால் தான் இந்தியாவைப் பீடித்துள்ள ஊழல் என்ற சாத்தானை ஒழிக்க முடியும். இதைக் கருத்தில் கொண்டு இவ்வழக்கில் மேல்முறையீடு செய்ய கர்நாடக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.