1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: புதன், 11 அக்டோபர் 2023 (20:36 IST)

பூக்குடலை திருவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம்

karur
கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் எறிபத்த நாயனார் பூக்குடலை திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறும்.

அந்தவகையில் இந்தாண்டு வருகிற 22&ந்தேதி எறிபத்த நாயனார் பூக்குடலை திருவிழா நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு முன்னேற்பாடு பணிகள் தொடர்பாக அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம் கரூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.

இதற்கு கோட்டாட்சியர் ரூபினா தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில் கோவில் வளாகம், விழா நடைபெறும் இடம், ஊர்வலம் செல்லும் இடங்கள் மற்றும் பக்தர்கள் கூடும் இடங்களில் போலீசார் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும். இப்பகுதிகளில் தடையில்லா மற்றும் சீரான மின்வினியோகம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.  தீயணைப்பு வாகனங்களுடன் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும்.

திருவிழா நாட்களில் பக்தர்களுக்கு எவ்வித இடையூறும் ஏற்படாவண்ணம் போக்குவரத்து ஒழுங்குப்படுத்தப்பட வேண்டும். தேவையான வாகனம் நிறுத்துமிடம் அமைத்து, அப்பகுதியில் பக்தர்கள் வாகனங்கள் நிறுத்துவதை உறுதி செய்ய வேண்டும். விழாவிற்கு வரும் சிவனடியார்கள் தங்குமிடம், அன்னதானம் வழங்கும் இடம், கோவில் வளாகம், விழா நடைபெறும் இடம், ஊர்வலம் செல்லும் இடங்கள், பக்தர்கள் கூடும் இடங்கள் ஆகிய பகுதிகளில் முழுமையாக தூய்மைபடுத்தி நோய்தடுப்பு மருந்துகளை தெளிக்க வேண்டும். பொதுமக்களுக்கு ஆங்காங்கே போதுமான குடிநீர் கிடைக்கும் வகையில் குடிநீர் சின்டெக்ஸ் டேங்க் அமைக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இக்கூட்டத்தில் கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் செயல் அலுவலர் சரவணன் மற்றும் சிவனடியார்கள் பலர் கலந்து கொண்டனர்.