எடப்பாடிக்கு எதிர்ப்பு - வேண்டா வெறுப்பாக முடிவெடுத்த திருநாவுக்கரசு
மேலிடத்தின் முடிவை மீற முடியாமல், நடக்கவுள்ள நம்பிக்கை வாக்கெடுப்பில், எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக காங்கிரஸ் வாக்களிக்கும் என தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசு அறிவித்துள்ளார் என்ற செய்தி வெளியாகியிருக்கிறது...
சசிகலா தரப்பில் எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக நியமிக்கப்பட்டவுடன் அவருக்கு ஆதரவாக, வாக்களிப்பதற்காக, காங்கிரஸ் கட்சியிம் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டதாகவும், அதில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் 8 பேரும் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாகவே வாக்களிப்பார்கள் என்ற செய்தி வெளியானது.
இந்நிலையில், காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூட்டத்தை நேற்று அக்கட்சியின் கொறாடா விஜயதாரணி கூட்டினார். அதில், எடப்பாடிக்கு எதிராக வாக்களிப்பது என முடிவெடுக்கப்பட்டது. ஆனால், அதற்கு திருநாவுக்கரசு உடன்படவில்லை. எனவே, காங்கிரஸின் முடிவு நேற்று அறிவிக்கப்படவில்லை.
இந்நிலையில், இன்று காலை 10.30 மணியளவில், செய்தியாளர்களிடம் பேசிய திருநாவுக்கரசு, எடப்பாடிக்கு எதிராக வாக்களிப்போம் என அறிவித்தார். சசிகலா தரப்பிற்கு ஆதரவளிப்பதில் காங்கிரஸ் மேலிடத்திற்கு விருப்பம் இல்லை என்பதால், அதை மீற முடியாமல் திருநாவுக்கரசு இந்த முடிவை எடுத்துள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளது..