குண்டுராவுக்கு கொரோனா: கவலையில்லாமல் சுற்றி திரியும் ஸ்டாலின்!
தமிழக காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளரும், முன்னாள் அமைச்சருமான தினேஷ் குண்டுராவுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் இன்னும் ஒரு சில மாதங்களில் நடைபெற இருக்கும் நிலையில் இப்போதே கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைகள் தொடங்கிவிட்டன. இதனிடையே தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநில காங்கிரஸ் கமிட்டி பொறுப்பாளராக நியமிக்கபப்ட்டுள்ள தினேஷ் குண்டுராவ் சென்னை வந்தார்.
கடந்த வெள்ளிக்கிழமை திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை தினேஷ் குண்டுராவ் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி., முதன்மைச்செயலாளர் கே.என்.நேரு மற்றும் தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி மற்றும் காங்கிரஸ் எம்எல்ஏ ராமசாமி, காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் கோபண்ணா உள்ளிட்டோர் இருந்தனர்.
இந்நிலையில் தமிழக காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளரும், முன்னாள் அமைச்சருமான தினேஷ் குண்டுராவுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. எனவே அவருடன் கடந்த இரண்டு நாட்களாக தொடர்பில் இருந்துவர்களும், சந்திப்பில் ஈடுப்பட்டவர்களும் கொரோனா பரிசோதனை செய்துகொள்ளுங்கள் என திருநாவுக்கரசர் வேண்டியுள்ளார்.
ஆனால் ஸ்டாலினோ, இன்று திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகள் தமிழகம் முழுவதும் விவசாய மசோதாவிற்கு எதிரான போராட்டத்தில் கலந்துக்கொண்டார். காஞ்சிபுரம் சென்ற மு.க.ஸ்டாலின் செல்லும் வழியில் அங்குள்ள வயல்பகுதிக்கு சென்றார். அங்குள்ள விவசாயிகளிடம் பேசி அவர்களின் குறைகளை கேட்டறிந்தார். அதுபோல விவசாய போராட்டத்திற்காக செல்வதால் பச்சைத்துண்டு, பச்சை மாஸ்க் அணிந்து சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.