வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : சனி, 27 ஆகஸ்ட் 2016 (11:16 IST)

இலங்கை தமிழர்கள் விவகாரம் : சேரனை தாக்கும் இணையவாசிகள்

நடிகரும், இயக்குநருமான சேரன், அண்மையில் ஒரு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு தயாரிப்பாளர்கள் திருட்டி டிவிடியால் அவதிப்படுவது குறித்து கருத்து தெரிவித்தார்.
 

 
அப்போது பேசிய அவர், “தமிழ்நாட்டில் 18 ஆயிரம் திருட்டு டிவிடி கடைகள் இருக்கின்றன. பர்மா பஜாரில் இருக்கிற அத்தனை கடைகளிலும் திருட்டு டிவிடி விற்கிறார்கள்.
 
தமிழ், தமிழன்னு நாம் சொல்றபோது அப்படியே உணர்வுகள் பொங்கி எழுகிறது. ஆனால், அந்த தமிழன் தான் இந்த மாதிரி வேலையெல்லாம் பார்த்துக்கிட்டிருக்கான். இந்த மாதிரி திருட்டுத்தனமா படத்தை ஆன்லைனில் வெளியிடுறவங்க இலங்கை தமிழர்கள்ன்னு சொல்கிறார்கள்.
 
இலங்கை தமிழர்களுக்காக நாம திரையுலகமே ஒன்றுசேர்ந்து குரல் கொடுத்து போராடி இருக்கோம். ஆனால் அதை சார்ந்த சிலர் தான் இதை செய்கிறார்கள் என கேள்விப்படுகிறபோது, ஏன் இவர்களுக்காக இதை செய்தோம் என அருவருப்பாக இருக்கிறது என்று கூறியிருந்தார்.
 
இந்த கருத்திற்கு சமூக வலைத்தளங்களில் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
 
பரூக் மேனன்:
 
முத்துக்குமாரிடமிருந்து பாடல்களை எழுதி வாங்கிய பின் செல்லாக் காசோலைகளைக் கொடுத்து நோய் முற்றிய நிலையில் சிகிச்சைக்கும் பணம் தராமல் அவனைச் சாகவிட்டார்களே உங்களின் யோக்கியபுத்திர தமிழ்சினிமா தயாரிப்பாளர்கள், அவர்களின் முகத்தில் காரி உமிழ்ந்துவிட்டு இலங்கைத் தமிழர்கள்மீதான உங்களின் அறச்சீற்ற அருவருப்பைத் துவங்குங்கள் .
துணை நடிகைகள், லைட் பாய், இன்னும் 'டிஸ்கஷன்' களின்போது உங்கள் கற்பனைக்கு மெருகேற்றச் சாராயம் வாங்கிவரும் ரூம்பாய் என அனைத்து எளியமாந்தரிடமிருந்தும் அளவுக்கதிகமான உழைப்புச்சுரண்டலைக் கொண்டிருக்குமொரு துறையிலிருந்து கொண்டு உங்களுக்கான பாதிப்புகளை பேசும் உரிமை உங்களுக்கு இருக்கத்தான் செய்கிறது...
ஆனால் தார்மீக நெறிகளின் அடிப்படையில் அதற்குறிய யோக்கியதையெல்லாம் உங்களுக்கு மட்டுமல்ல உங்கள் துறை சார்ந்த எவனுக்குமே கிடையாது.
 
ஜி விஜயபத்மா எழுத்தாளர் இயக்குனர்:
 
இயக்குநர் சகோதரர் சேரனும், சமுகக் கருத்துகளைப் படமாக எடுத்தவர். நானும் சமூக அக்கறையுடன் தான் நர்த்தகி படம் எடுத்தேன். சமூக விசயங்களில் எவ்வளவு உண்மையாக செயல்படுவேன் நான் என்பது என்னுடன் பயணித்த தோழர்களுக்குத் தெரியும். இன்று என் சகோதரன் சேரன் எனக்கு ஒரு படிப்பினை சொல்லிக் கொடுத்துள்ளார். சமூக விசயங்களில் அதிக அக்கறைக் காட்டினால் தனிப்பட்ட தாக்குதல்தான் என்று. என் 20 வருட சமூக வாழ்லின் போராட்டங்களின் பரிசாக நிறைய அலமானங்களையும், அவதூறுக ளையும் சந்தித்து இருக்கிறேன். அதில் இதுவும் ஒன்று. "போராடினால் உண்டு பொற்காலம்".வாழ்க சகோதரர் சேரன்
 
பாலை கார்த்திக்:
 
தமிழ் நாட்டுல இருக்கிற 18000 திருட்டு டிவிடி கடைகளும் இலங்கைத் தமிழர்கள்தான் நடத்துகிறார்களா சேரன்? போர்க்களத்தில் சாவின் விளிம்பில் ஊசலாடிக் கொண்டிருந்த ஈழத்தமிழர்களுக்காக. நீங்கள் ஒருநாள் போராடியதை அவமானமாகக் கருதுகிறீர்கள்?
 
நம் ஊரில் வியாபாரத்தை சரி செய்யாமல், திரையரங்குகளை சரி செய்யாமல்,தொலைக்காட்சி உரிமைகளை சரி செய்யாமல் நடிகர் நடிகைகளின் சம்பளத்தை சரி செய்யாமல் வெளிநாட்டு உரிமை மொத்தமாக நான்கே பேரிடம் காலம் காலமாக சிக்கிக் கொண்டு தவிப்பதை சரி செய்யாமல், பிரச்னையின் ஆழத்தை புரிந்து சரி செய்ய முயற்சிக்காமல் பாவப்பட்ட பரிதாபத்துக்குரிய ஈழத்தமிழர்களை குற்றம் சொல்வது முட்டாள்தனம் சேரன்.
 
வறுமையின் கோரப்பிடியில் சிக்கி செத்து விடுவமோ என்ற பயத்தில் ரொட்டியை திருடியவனைக் கட்டி வைத்து அவனை ஆட்களை ஏவி அடித்துவிட்டு, என் வீட்டு வைர நகையை திருடிவிட்டான் என்று அபாண்டமாக பழியை போடும் பணக்கார அரக்கத் திமிர் உங்கள் வார்த்தைகளில் தெறிக்கிறது.
 
உங்கள் வார்த்தைகளை உங்களுடையதாக மட்டுமே வைத்துக் கொள்ளுங்கள். ஒட்டு மொத்த தமிழ் சினிமாவின் கருத்தும் இதுதான் என்று பதிவு செய்ய நினைக்காதீர்கள்.

நெடுந்தீவு முகிலன்:
 
தமிழ் நாட்டில் பதினெட்டாயிரம் திருட்டு வீசிடி கடைகள் இருப்பதாக தகவலும் சொல்லி விட்டு இலங்கை தமிழர்களின் விடுதலை போராட்டத்தோடு திருட்டு வீசிடி பிரச்சனையை ஒப்பீட்டு இயக்குநர் சேரன் பேசியது வேதனைக்குரியது.
 
போராட்டத்தின் பாதிப்பில் இருந்து இன்னும் வெளிவராமல் பல மக்கள் அவதிபடுகையில் இலங்கை தமிழர்களுக்காக குரல் கொடுத்தது அருவருப்பாக உள்ளது என கருத்து வெளியிட்டது அவதூறானது.
 
இலங்கை தமிழர்கள் இந்திய தமிழர்கள் என ஒரு சுயாதீன படைப்பாளி பிரிவினை வாதம் பேசுவதும் கவலையழிக்கின்றது.
 
தென்னிந்திய தமிழ் திரைப்படங்களை தயாரிப்பவர்களாகவும் வெளிவரும் திரைப்படங்களுக்கு பாலாபிசேகம் செய்து கொண்டாடுபவர்களாகவும் இலங்கை தமிழர்கள் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.