1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: வியாழன், 12 பிப்ரவரி 2015 (19:44 IST)

”என்னம்மா இப்படி பண்றீங்களேமா?” - விஜயகாந்த் பற்றிய அவதூறுகளுக்கு ஆணையரிடம் புகார்

தேமுதிகவினர், ஃபேஸ்புக், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் விஜயகாந்த் பற்றிய கேலி சித்திரங்கள், அவதூறுகளை வெளியிடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி சென்னை மாநகர காவல்துறை ஆணையரிடம் புகார் அளித்தனர்.
 
இது குறித்து ஆணையரிடம் அளித்துள்ள புகாரில், "தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைவரும், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் எதிர்கட்சித் தலைவரும், லட்சக்கணக்கான தொண்டர்களின் பேரன்பிற்கு பாத்திரமானவருமான விஜயகாந்தை தரக்குறைவாக விமர்சித்தும், அவரது மனம் புண்படும் வகையில் உண்மைக்குப் புறம்பாகவும், கேலிச்சித்திரங்கள், துணுக்குகள், தரக்குறைவான விமர்சனங்கள் போன்றவை வெளியிடப்படிகின்றன.

 
இவை ஃபேஸ்புக்கிலும், வாட்ஸ் அப்பிலும், ட்விட்டர் மற்றும் சமூக வலைதளங்களில் தொடர்ந்து உள்நோக்கத்துடனும், அவரது புகழை சீர்குலைக்கும் வண்ணம் குறிப்பிட்ட ஒரு சிலரால் பரப்பப்பட்டு வருகிறது.
 
இதில், மேட்டுப்பாளையம் அதிமுக தொழிற்சங்க நிர்வாகி எம்.கே.சந்தானம், அதிமுக நிர்வாகி குடந்தை முத்து ஆகியோர் குறிப்பிட தகுந்தவர்கள் ஆவர். இவர்கள் மீது இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
 
இவர்கள் முகநூலில் வெளியிட்டுள்ள தரக்குறைவான கேலிச்சித்திரங்கள் மற்றும் விமர்சனங்களில் சிலவற்றை தங்களின் பார்வைக்காகவும், தகவலுக்காகவும், இத்துடன் இணைத்துள்ளோம். இது போன்ற விஷமத்தனமான கேலிச்சித்திரங்கள் விஜயகாந்த்தின் லட்சக்கணக்கான ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் மற்றும் அபிமானிகளின் மனங்களை பெரிதும் புண்படுத்தியுள்ளது.
 
கருத்து சுதந்திரம் என்ற பெயரில் தரக்குறைவாகவும், வக்கிரமனதுடனும், அரசியல் காழ்புணர்ச்சியுடனும், தேமுதிக கட்சித் தலைவரும், தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான விஜயகாந்த்தை தரக்குறைவாக விமர்சிப்பது எந்தவகையிலும் ஏற்க்க முடியாத செயலாகும்.
 
மேலும் தற்பொழுது பேஸ்புக்கிலும், வாட்ஸ் அப்பிலும், ட்விட்டர் ஆகியவற்றில் உள்ள தரக்குறைவான படங்கள், விமர்சனங்களை உடனடியாக நீக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
 
விஜயகாந்த்தை உண்மைக்கு புறம்பாகவும், சமூகத்தில் அவரது நற்பெயருக்கும், புகழுக்கும் களங்கம் விளைவிக்கும் வகையிலும் கேலிச்சித்திரங்கள், படங்கள், துணுக்குகள், தரக்குறைவான விமர்சனங்கள் போன்றவை பேஸ்புக்கிலும், வாட்ஸ் அப்பிலும், ட்விட்டர் ஆகியவற்றில் வெளியிடுபவர்கள் மீது தகவல் தொடர்பு சட்டம் மற்றும் இந்திய தண்டனை சட்டம் மூலம் குற்ற வழக்குகளை பதிவு செய்து கடுமையான நடவடிக்கை எடுத்து தண்டிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.