1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : ஞாயிறு, 26 மே 2024 (17:10 IST)

நீதிபதி சுவாமிநாதன் மீது புகார்..! நடவடிக்கை எடுக்க உச்சநீதிமன்றத்திற்கு கொளத்தூர் மணி கடிதம்..!

Judge Swaminathan
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி திராவிடர் விடுதலை கழகத் தலைவர் கொளத்தூர் மணி உச்சநீதிமன்றத்திற்கு கடிதம் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
 
கரூர் மாவட்டத்தில் உள்ள கோயிலில் எச்சில் இலைகளில் உருண்டு நேர்த்திக்கடன் செலுத்துவதற்கு கடந்த 2015 ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் மணிக்குமார், வேலுமணி ஆகியோர் அடங்கிய அமர்வு தடை விதித்தது. இந்த தடைக்கு எதிராக தொடரப்பட்ட மனு மீதான விசாரணையின் போது நீதிபதி சுவாமிநாதன், இந்த விழாவுக்கு விதிக்கப்பட்ட தடையை ரத்து செய்து அண்மையில் உத்தரவிட்டார். 
 
இந்த நிலையில், நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி உச்சநீதிமன்றத்திற்கு திராவிடர் விடுதலை கழகத் தலைவர் கொளத்தூர் மணி கடிதம் அனுப்பியுள்ளார். அதில்,  கர்நாடகா மாநிலத்தில் பிராமணர்கள் சாப்பிட்ட எச்சில் இலைகள் மீது, இதர சாதியினர் உருளும் சடங்கிற்கும் கடந்த 2014ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் தடை விதித்ததை சுட்டிக்காட்டியுள்ளார்.

 
கரூர் வழக்கில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் வழங்கிய உத்தரவு, உச்சநீதிமன்றத் தீர்ப்புகளுக்கும், சமூக முன்னேற்றத்திற்கும் எதிரானது எனக் கூறியுள்ளார். மேலும், அவரின் நிலைப்பாடு அரசியலமைப்பின் கொள்கை மற்றும் அடிப்படை கட்டமைப்புக்கு எதிரானது என்றும் தெரிவித்துள்ளார்.