1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: சனி, 11 ஜூன் 2016 (14:01 IST)

குமரியில் பதற்றம்: மத கலவரத்துக்கு வழி வகுக்கிறதா பாஜக?

கன்னியாகுமரி மாவட்டம் நாட்டின் கடைக்கோடியில் இருக்கிறது. இந்த மாவட்டதில் உள்ள குளச்சலில் வர்த்தக துறைமுகம் கொண்டு வர மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறார்.


 
 
இந்த குளச்சல் வர்த்தக துறைமுகம் அமைவதின் மூலம் அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது. மீண்டும் மண்டைக்காடு மதக்கலவரம் போல் ஒரு மதக்கலவரம் உருவாக வாய்ப்புள்ளதாக அங்குள்ள மக்கள் தெரிவிக்கின்றனர்.
 
குளச்சல் அருகே வர்த்தக துறைமுகம் அமைந்தால், அது மீனவர்களை பாதிக்கும் என்று அங்குள்ள மீனவர்கள் திடீரென இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்க தொடங்கியுள்ளனர்.
 
மேலும் இந்த வர்த்தக துறைமுகம் வந்தால் குமரி மாவட்டத்தில் தொழில்கள் வளரும், 1 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என ஒரு தரப்பினர் கூறுகின்றனர். இவர்கள் மீனவர்களின் திடீர் போரட்டத்தால் அதிருப்தியடைந்துள்ளனர்.
 
இந்நிலையில் இந்த திட்டத்திற்கு அந்த மாவட்டத்தில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் தடையாக இருக்கிறார்கள் என குற்றம் சாட்டினார் பொன்னார். மேலும் இந்த துறைமுகம் அமையாவிட்டால் தன்னுடைய மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு களத்தில் இறங்கி போராடுவேன் என எச்சரிக்கை விடுத்தார்.
 
இந்த பிரச்சனைக்கு தற்போது மத சாயம் பூசியுள்ளது பாஜக. கத்தோலிக்க மதத்தை சேர்ந்த மீனவர்களுக்கு, பிற ஜாதியை சேர்ந்த சிஎஸ்ஐ மற்றும் கத்தோலிக்க கிறிஸ்தவர்களும் ஆதரவு அளிக்க வேண்டும் என்று அந்த மாவட்ட தேவாலயங்களில் பாதிரியார்கள் கூறி வருவதாக பாஜக குற்றம்சாட்டியுள்ளது.
 
இந்த பிரச்சனை குறித்து கூறிய பாஜகவின் வானதி சீனிவாசன், பாஜக அங்கு செல்வாக்குடன் இருப்பதாகவும், இந்த துறைமுகம் அங்கு அமைந்தால் பாஜக அங்கு மேலும் செல்வாக்கை அதிகரிக்கும் என்பதால் திமுக, காங்கிரஸ் அதனை வர விடாமல் தடுப்பதாகவும், இலங்கைக்கு ஆதரவாக செயல்படுவதாகவும் கூறினார்.
 
மேலும் தேர்தல் நேரத்தில் பாதிரியார்கள் திமுக, காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தனர் எனவும், அதற்கு நன்றிகடனாக இந்த கட்சிகள் தற்போது செயல்படுவதாக நேரடியாக மத அரசியல் குற்றச்சாட்டை வைத்தார்.
 
இந்நிலையில் இந்த பிரச்சனை தற்போது மீனவர்கள் பிரச்சனையை தாண்டி மதங்களுக்கு இடையேயான பிரச்சனையாக உருவெடுத்து வருகிறது. அதாவது இந்த துறைமுகம் அமைய வேண்டும் என கூறுபவர்கள் இந்துக்கள் மற்றும் முஸ்லிம்கள் காரணம் தொழில் வளரும், வேலைவாய்ப்பு உருவாகும். ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் மீனவர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் காரணம் மீன்பிடி தொழில் பாதிக்கப்படும் குடியிருப்புகள் அகற்றப்படும்.
 
இப்படி இந்துக்களும், கிறிஸ்தவர்களும் எதிர் கருத்துடன் அங்கு இருக்கின்றனர். இந்நிலையில் பாஜகவினர் நேரடியாக கிறிஸ்தவ பாதிரியார்கள் இதன் பின்னனியில் இருப்பதாக குற்றம் சாட்டுவது அங்கு பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. பொன்.ராதாகிருஷ்ணன் ராஜினாமா செய்வேன் என பேசியது மேலும் இந்த பிரச்சனையை தூக்கிபிடிக்கிறது. 1982-ஆம் ஆண்டு குமரியில் நடந்த மண்டைக்காடு மத கலவரத்தை மறக்காதவர்கள் மேலும் ஒரு மத கலவரத்தை இது உருவாக்க பார்க்கிறது என்கிறார்கள்.