நீங்க சும்மா இருந்தாலே போதும்! எந்த பிரச்சினையும் வராது! - புதுச்சேரி முதல்வர்
திமுக – காங்கிரஸ் கூட்டணியில் பிளவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி இன்று முக ஸ்டாலினை சந்தித்து பேசியுள்ளார்.
உள்ளாட்சி தேர்தலில் திமுக தங்களுக்கு சரியாக இடம் ஒதுக்கவில்லை என்று கே.எஸ் அழகிரி கூறியிருந்தார். அதர்கு பதிலளிக்கும் விதமாக சமீபத்தில் பேசிய திமுக பொருளாளர் துரைமுருகன் காங்கிரஸ் ஆதரவினால்தான் திமுக வெற்றி பெற வேண்டும் என்ற அவசியமில்லை என்று பொருள்படும் ரீதியில் பேசியது பரபரப்பை உண்டாக்கியது. காங்கிரஸ் – திமுக கூட்டணியில் பிளவு ஏற்பட்டுள்ளதாக செய்திகள் பரவிய நிலையில் டெல்லியில் காங்கிரஸ் தலைமையில் நடந்த எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் திமுக கலந்து கொள்ளவில்லை.
இதனால் திமுக – காங்கிரஸ் இடையே விரிசல் ஏற்பட்டதாக கூறப்பட்ட நிலையில் புதுச்சேரி காங்கிரஸ் தலைவரும், முதல்வருமான நாராயணசாமி திமுக தலைவர் முக ஸ்டாலினை சந்தித்து பேசியுள்ளார். பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர் ”காங்கிரஸ் – திமுக கூட்டணியில் விரிசல் என்று யார் சொன்னது? எங்கள் கூட்டணி பலமாக இருக்கிறது. அடுத்த சட்டமன்ற தேர்தலிலும் கூட்டணியாக தேர்தலை எதிர்கொள்வோம். பத்திரிக்கையாளர்கள் தேவையற்ற வதந்திகளை பரப்பாமல் இருந்தாலே போதும்” என பேசியுள்ளார்.
மதியம் 12 மணிக்கு மேல் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியும், முக ஸ்டாலினும் சந்திக்க உள்ளனர். அந்த சந்திப்புக்கு பிறகு மேலதிக விவரங்கள் தெரிய வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.