1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Updated : திங்கள், 23 மே 2016 (10:57 IST)

தமிழக முதல்வராக ஜெயலலிதா இன்று பதவியேற்பு: 28 அமைச்சர்கள் பதவியேற்பு

நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் அதிமுக 232 தொகுதிகளில் 134 தொகுதிகளை கைப்பற்றி அறுதிபெரும்பாண்மையுடன் ஆட்சியை தொடர்ந்து கைப்பற்றியது. இதனையடுத்து முதலமைச்சர் ஜெயலலிதா ஆறாவது முறையாக இன்று மீண்டும் ஆட்சியமைக்கிறார்.


 
 
நேற்று முன்தினம் தமிழக ஆளுநர் கே.ரோசய்யாவை சந்தித்து சட்டமன்ற அதிமுக கட்சி தலைவராக 134 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கடிதத்தை கொடுத்து ஆட்சியமைக்க உரிமை கோரினார் ஜெயலலிதா.
 
இதனையடுத்து இன்று சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கத்தில் மதியம் 12 மணிக்கு முதலமைச்சர் ஜெயலலிதாவும், 28 அமைச்சர்களும் பதவியேற்க உள்ளனர்.
 
இந்த பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள், திமுக தலைவர் கருணாநிதி, திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பலருக்கும் அழைப்பிதழ்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
 
மத்திய அரசின் சார்பில் அமைச்சர்கள் வெங்கய்ய நாயுடு, பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோரும், பாஜக தேசிய தலைவர் அமித் ஷா உள்ளிட்டோரும் பங்கேற்பர் எனத் தெரிகிறது.
 
இதனையடுத்து சென்னை பல்கலைக்கழக வளாகமும், கடற்கரை சாலையும் விழாக்கோலம் பூண்டுள்ளது. கடந்த முறை ஜெயலலிதா இதே நாள் தான் பதவியேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.