அணைக்கு வைத்தியம் பார்த்த எடப்பாடி பழனிசாமிக்கு டாக்டர் பட்டம் வழங்க வேண்டும் - அன்புமணி கிண்டல்
மனிதர்களுக்கு காய்ச்சல் வருவது போல முக்கொம்பு அணைக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறிய எடப்பாடி பழனிசாமிக்கு டாக்டர் பட்டம் வழங்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
கடந்த சில நாட்களாக கேரளா மட்டுமின்றி தென்னிந்தியாவின் பல பகுதிகளில் கனமழை தொடர்ந்து பெய்து அதிக அளவில் வெள்ள நீர் வெளியேறியதால் அழுத்தம் காரணமாக பழமையான திருச்சி முக்கொம்பில் உள்ள அணையின் 9 மதகுகள் அடித்து செல்லப்பட்டன.
இந்நிலையில் நேற்று திருச்சி முக்கொம்பில் உள்ள அணையில் உடைப்பு ஏற்பட்ட பகுதியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பார்வையிட்டார். பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், பருவமாற்றத்திற்கு மனிதர்களுக்கு காய்ச்சல் ஏற்படுவது போல வெள்ளப்பெருக்கால் அணையின் மதகுகள் உடைந்துவிட்டது என கூறினார். முதல்வரின் இந்த கருத்து சமூக வலைதளங்களில் பயங்கர கேலிக்கும் கிண்டல்களுக்கும் ஆளாகியுள்ளது
இதுகுறித்து பேசிய பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் அணைக்கு மருத்துவம் பார்த்துவிட்டு, அணை உடைந்ததற்கு அற்புதமான விளக்கத்தை அளித்த எடப்பாடி பழனிசாமிக்கு ‘டாக்டர் பட்டம்’ தான் வழங்க வேண்டும் என எடப்பாடியாரை கிண்டலடிக்கும் விதமாக பேசியுள்ளார்.