திங்கள், 25 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 14 ஜூன் 2022 (09:50 IST)

கிறிஸ்தவர் குடியரசு தலைவர் ஆக வேண்டும்! – திருமாவளவன் கோரிக்கை!

இந்திய குடியரசு தலைவருக்கான தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதில் கிறிஸ்தவர் ஒருவரை போட்டியிட செய்ய வேண்டும் என திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்தியாவின் குடியரசு தலைவராக தற்போது ராம்நாத் கோவிந்த் பதவி வகித்து வருகிறார். குடியரசு தலைவருக்கான பதவி காலம் 5 ஆண்டுகள் ஆகும். ராம்நாத் கோவிந்தின் குடியரசு தலைவர் பதவிக்காலம் ஜூலை 24ம் தேதியுடன் முடிவடைகிறது.

இதனால் அடுத்த குடியரசு தலைவர் பதவிக்கு யார் தேர்வு செய்யப்படுவார்கள் என்ற எதிர்பார்ப்பு தீவிரமாக உள்ளது. இந்நிலையில் குடியரசு தலைவர் தேர்தல் ஜூலை 18ம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையன் அறிவித்துள்ளது.

இந்த குடியரசு தலைவர் தேர்தலில் எதிர்கட்சிகள் சார்பில் கிறிஸ்தவர் ஒருவரை குடியரசு தலைவர் வேட்பாளராக முன்னிறுத்த வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் “பெரும்பான்மைவாத அடிப்படையில்‌ இந்துக்களை ஒருங்கிணைக்க. சிறுபான்மையினருக்கெதிரான வெறுப்பு அரசியலையே தமது பிழைப்புக்கான கருவியாகப்‌ பயன்படுத்தும்‌ பாஜக, குடியரசுத்‌ தலைவர்‌ தேர்தலையும்‌ அதே நோக்கத்தில்தான்‌ பயன்படுத்தும்‌. எனவே, எதிர்க்கட்சிகள்‌ தமது பொது வேட்பாளராகக்‌ கிறித்துவ சமூகத்தைச்‌ சேர்ந்த ஒருவரை நிறுத்த வேண்டும்‌ என்று வலியுறுத்துகிறோம்‌.

இது பாதுகாப்பற்ற நிலையில்‌ எந்நேரமும்‌ அச்சத்தில்‌ உழலும்‌ கிறித்தவ மக்களுக்கு 'நம்பிக்கையளிப்பதாகவும்‌ வெறுப்பு அரசியலுக்கு எதிரான ஒரு மாற்று நடவடிக்கையாகவும்‌ அமையுமென்பதை விடுதலைச்‌ சிறுத்தைகள்‌ கட்சி சுட்டிக்காட்ட விரும்புகிறது” என்று தெரிவித்துள்ளார்.