1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : சனி, 27 ஜூலை 2024 (14:20 IST)

ஆகஸ்ட் 22-ல் அமெரிக்கா செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்.! மத்திய அரசு ஒப்புதல்..!!

MK Stalin
முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் ஸ்டாலின் ஆகஸ்ட் 22-ம் தேதி அமெரிக்கா செல்ல உள்ள நிலையில்,  முதல்வரின் 15 நாள் பயணத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.   

துபாய், அபுதாபி, ஐக்கிய அரபு நாடுகள், லண்டன், சிங்கப்பூர், ஜப்பான், ஸ்பெயின் நாடுகளுக்கு முதல்வர் ஸ்டாலின் ஏற்கனவே பயணம் மேற்கொண்டு, தொழில் நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி பல்வேறு முதலீடுகளை கொண்டு வந்தார்.  தொடர்ச்சியாக அமெரிக்கா செல்ல முதல்வர் ஸ்டாலின் திட்டமிட்டிருந்தார்.

இந்த பயணம் ஜூலை மாதத்தில் இருக்கும் என கூறப்பட்டிருந்த நிலையில்,  மக்களவை தேர்தல் பணியை தொடர்ந்து, பல்வேறு திட்டங்களின் தொடக்க விழாக்கள் மற்றும் ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திர தின விழா காரணமாக முதல்வரின் பயணம் ஆகஸ்ட் 3-வது வாரத்துக்கு தள்ளிவைக்கப்பட்டது.
 
முதல்வர், அமைச்சர்கள் உள்ளிட்டோர் வெளிநாடு செல்ல, மத்திய அரசிடம் முறைப்படி ஒப்புதல் பெற வேண்டும். அந்த வகையில், முதல்வரின் அமெரிக்க பயணத்துக்கு மத்திய அரசிடம் ஒப்புதல் கோரப்பட்டது. இதையடுத்து, மத்திய அரசு ஆகஸ்ட் 22 முதல் 15 நாள் பயணத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.
 
இதைத் தொடர்ந்து, முதல்வர் ஸ்டாலின் வரும் ஆகஸ்ட் 22-ம் தேதி அமெரிக்கா புறப்பட்டு செல்கிறார். அங்கு 15 நாட்கள் வரை அவர் தங்கியிருக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. அப்போது, அமெரிக்காவின் பல்வேறு மாநிலங்களுக்கு சென்று, அங்குள்ள முதலீட்டாளர்களை சந்தித்து தமிழகத்தில் முதலீடு செய்ய வருமாறு அழைப்பு விடுக்க உள்ளார்.

 
கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை உட்பட பல்வேறு நிறுவனங்களின் தலைவர்கள், தமிழ் அமைப்புகளின் நிர்வாகிகள், தமிழக வம்சாவளியினரையும் முதல்வர் சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது.