ஆளுநர் செய்தது ஆய்வே இல்லை: மௌனம் கலைத்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி!
ஆளுநர் செய்தது ஆய்வே இல்லை: மௌனம் கலைத்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி!
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் அதிகாரிகளை அழைத்து ஆய்வு நடத்தியது தமிழக அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மாநில சுயாட்சிக்கு எதிராக உள்ளது ஆளுநரின் நடவடிக்கை என எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒரே குரலில் எதிர்த்தனர்.
ஆளுநர் தனது அதிகார வரம்பிற்கு அப்பார்ப்பட்டு செயல்படுகிறார் என மற்ற கட்சிகள் அனைத்தும் ஆளுநருக்கு கண்டனம் தெரிவிக்க, எதிர்க்க வேண்டிய ஆளும் கட்சியோ அதனை எதிர்க்காமல் சில அமைச்சர்கள் ஆளுநரின் செயலை வரவேற்றனர். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வாயை மூடி மௌனம் காத்துக்கொண்டு இருந்தார்.
இந்நிலையில் ஆளுநரின் ஆய்வு குறித்து எதிர்க்கட்சிகள் தொடர்ந்து பேசி வருவதால் இந்த விவகாரத்தில் முதல் முறையாக தனது மௌனத்தை கலைத்துள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. சிவகங்கையில் இன்று நடந்த எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவுக்கு பின்னர் சென்னை திரும்பிய முதல்வர் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆளுநரின் ஆய்வு குறித்து பேசுகையில், ஆளுநர் செய்தது ஆய்வே இல்லை, அவர் அரசின் திட்டங்களை தெரிந்து கொள்கிறார், அவ்வளவுதான். எதிர்க்கட்சிகள் இதைத் திட்டமிட்டு அரசியலாக்கி வருகின்றன. ஊடகங்களும் இதைப் பெரிதாக்கியுள்ளன என குற்றம் சாட்டினார்.