சென்னை மெரினாவில் விபத்து! தலை நசுங்கி உயிரிழந்த பெண் காவலர்!
சென்னை மெரினா சாலையில் பாமாயில் ஏற்றி வந்த கண்டெய்னர் லாரி மோதியதில் பெண் காவலர் பலியாகியுள்ளார்.
புதுப்பேட்டை ஆயுதப்படையில் பணியாற்றி வந்தவர் பவித்ரா எனும் காவலர். அவர் தன்னுடன் பணிபுரியும் மற்றொரு காவலருடன் சென்னை மெரினா கண்ணகி சிலை அருகே இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது எதிரே பாமாயில் ஏற்றிவந்த கண்டெய்னர் லாரி ஒன்று வந்துள்ளது.
அப்போது எதிர்பாராத விதமாக கண்டெய்னர் லாரி இரு சக்கர வாகனம் மேல் மோத, பவித்ரா டயருக்குள் சிக்கிக்கொண்டார். இதனால் தலை நசுங்கி அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். பின்னால் இருந்த காவலர் காயமடைந்த நிலையில் அவர் சிகிச்சைக்காக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது சம்மந்தமாக வழக்குப் பதிவு செய்த போலிஸார் லாரி டிரைவர் ராஜசேகரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஊரடங்கு காரணமாக விபத்துகள் குறைந்திருந்த நிலையில் இப்போது இந்த விபத்து நடந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.