மாட்டுக்கறி போட்டோ போட்ட நாம் தமிழர் பிரமுகர்!; சென்னை போலீஸ் பதிலால் சர்ச்சை!
மாட்டுக்கறி சாப்பிட்ட போட்டோ போட்ட நாம் தமிழர் பிரமுகர் பதிவுக்கு சென்னை போலீஸ் அளித்த பதில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
நாம் தமிழர் கட்சியை சேர்ந்த பிரமுகர் அபுபக்கர் என்பவர் சமீபத்தில் தான் சாப்பிட்ட உணவின் புகைப்படத்தை ட்விட்டரில் பதிவிட்டு “மாட்டுக்கறி” என்று குறிப்பிட்டிருந்தார். இந்த பதிவின் கீழ் பதிலளித்த சென்னை காவல் ஆணையர் அலுவலக அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கு “இத்தகைய பதிவு இங்கு தேவையற்றது” என தெரிவித்திருந்தது.
சென்னை போலீஸின் இந்த பதில் பெரும் சர்ச்சையை கிளப்பியது. இந்நிலையில் அபுபக்கருக்கு ஆதரவாக ட்விட்டரில் கேள்வி எழுப்பிய திமுக எம்.பி செந்தில் குமார் “அந்த பதிவில் என்ன தப்பு. என்ன பதிவிட வேண்டும் என்ன சாப்பிட வேண்டும் என்று சென்னை காவல்துறை எதன் அடிப்படையில் இந்த தேவையற்ற அறிவுரை. கொடுத்த நூற்றுக்கணக்கான abusive/பொய் பதிவுகளுக்கு எந்த நடவடிக்கையும் இல்லை.” என்று கண்டனம் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் அந்த பதிவு நீக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பேசிய சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் “அந்த பதில் ட்விட்டர் கணக்கை நிர்வகிப்பவரால் தவறுதலாக போடப்பட்டது. பின்னர் அது நீக்கப்பட்டுவிட்டது” என்று விளக்கம் அளித்துள்ளார்.