1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: சனி, 21 செப்டம்பர் 2024 (09:11 IST)

தமிழகத்தில் மீண்டும் கோடை காலமா? நேற்று 12 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் பதிவு..!

தமிழகத்தில் மீண்டும் கோடை காலத்தை போலவே கடும் வெயில் நிலவியுள்ளது. சென்னை உள்பட  12 இடங்களில் நேற்று வெப்பநிலை 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமாக பதிவானது.

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பின்படி, நேற்று அதிகபட்சமாக மதுரை விமான நிலையத்தில் 103.28 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானது. அதனைத் தொடர்ந்து, மதுரை நகரம் 102.56, நாகப்பட்டினம், தஞ்சாவூர் 102.2, பாளையங்கோட்டை 101.84, திருச்சி 101.3, பரமத்திவேலூர், ஈரோடு, பரங்கிப்பேட்டை 100.76, சென்னை நுங்கம்பாக்கம், மீனம்பாக்கம் 100.58, கடலூர் 100.4 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகி உள்ளது. புதுச்சேரியிலும் 100.4 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது.

தமிழகத்தில் இன்றும் வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

ஆனால் அதே நேரத்தில் மேற்கு திசை காற்றின் வேகம் மாறுவதால், இன்று முதல் செப்டம்பர்  26ஆம் தேதி வரை தமிழகத்தின் சில பகுதிகளில், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னையில் செப்டம்பர் 21, 22 ஆகிய தேதிகளில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும், மேலும் நகரின் சில பகுதிகளில் மிதமான மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையின் அதிகபட்ச வெப்பநிலை 100.4 டிகிரி ஃபாரன்ஹீட்டாக இருக்கும்.

Edited by Mahendran