1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Updated : வெள்ளி, 5 ஜூன் 2015 (10:47 IST)

ஐ.ஐ.டி.க்கு எதிராக போராடியவர்களை தமிழக அரசு, குண்டர் சட்டத்தில் கைது செய்திருக்க வேண்டும் - ஹெச்.ராஜா கருத்து

சென்னை ஐ.ஐ.டி.க்கு எதிராக போராடியவர்களை தமிழக அரசு, குண்டர் சட்டத்தில் கைது செய்திருக்க வேண்டும் என பாஜக தேசிய செயலாளர் ஹைச்.ராஜா கருத்து தெரிவித்துள்ளார்.
 
தாராபுரத்தில், பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
 
சென்னை ஐ.ஐ.டி.யில் அம்பேத்கர், பெரியார் மாணவர் வட்டம் அமைப்பில் 10 மாணவர்கள் கூட உறுப்பினர்களாக இல்லை. ஆனாலும், அவர்களுக்கு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டுத்தான்  அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
 
சென்னை ஐ.ஐ.டி.யில், அமைப்பு வைத்துக்கொள்ளலாம். நிகழ்ச்சிகளை நடத்தலாம். ஆனால் ஐ.ஐ.டி. பெயரை பயன்படுத்தக்கூடாது என்பது தான் பொதுவான விதி.
 
ஆனால், அந்த மாணவர்கள் ஐ.ஐ.டி.பெயரை வேண்டும் என்றே பயன்படுத்தியுள்ளனர். அடிப்படை நிபந்தனைகளை அவர்கள் மீறியுள்ளனர். அதுதான் பிரச்சனைக்கு காரணமே. இதை அவர்கள் வெளியே காட்டிக் கொள்ளாமல் வசதியாக மறைத்துவிட்டனர்.
 
பிரதமர் நரேந்திர மோடியை எதிர்த்துப் பேசியதாலும், இந்து மதத்திற்கு எதிராகப் பேசியதாலும் அங்கீகாரம் ரத்து செய்துவிட்டதாக பிரச்சினையை திசை திருப்பி வருகின்றனர்.
 
ஆனால், இந்த பிரச்சினைக்கும், நரேந்திர மோடி அரசுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. ஐ.ஐ.டி. என்பது சுயஆட்சி அதிகாரம் பெற்ற ஒரு அமைப்பு. நிர்வாக ரீதியாக நிறுவனத்தின் விதிகளை மீறியதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கை இது. 
 
சென்னை ஐ.ஐ.டி.க்கு எதிராக போராடியவர்களை தமிழக அரசு, குண்டர் சட்டத்தில் கைது செய்திருந்தால், பிரச்சினைக்கு தீர்வு ஏற்பட்டிருக்கும். ஆனால், தமிழக அரசு அவ்வாறு செய்யவில்லை.
 
சென்னை, ஐ.ஐ.டி. நிர்வாகம் பிரச்சினைக்குரிய சம்பந்தப்பட்ட மாணவர்களுடன் எந்த நிலையிலும், சமரசம் செய்யக்கூடாது. அந்த அமைப்பின் அங்கீகாரம் வாபஸ் பெற்றதை ரத்தும் செய்யக்கூடாது என்றார்.