1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: புதன், 10 ஆகஸ்ட் 2016 (12:22 IST)

ஈஷா மையத்தில் 2 பெண்கள் நிலை? : விசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு

ஈஷா யோகா மையத்தில் தனது 2 மகள்கள் கட்டாயப்படுத்தி தங்க வைக்கப்பட்டுள்ளதாக அவர்களின் தாயார் தாயார் சத்யவதி அளித்துள்ள புகார் குறித்து மாவட்ட நீதிபதி விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது.
 

 
கோவை வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் பிரபல ஆன்மீகவாதியான ஜக்கி வாசுதேவ் நடத்தும் ஈஷா யோகா மையம் இயங்கி வருகின்றது. ஈஷா யோகா மையத்தில் திருமணமாகாத தனது இரு மகள்கள் கட்டாயப்படுத்தி சன்னியாசிகளாக ஆக்கப்பட்டிருப்பதாக வேளாண்மைக் கல்லூரியின் ஓய்வுபெற்ற பேராசிரியர் புகார் அளித்திருந்தார்.
 
தனது இரு மகள்களை கட்டாயப்படுத்தி மொட்டையடித்து துறவறம் மேற்கொள்ள வைத்திருப்பதாகவும், அங்குள்ளவர்களுக்கு போதை வஸ்துகள் உட்கொள்ளவைப்பதும், மூளைச்சலவை செய்து சொத்துக்களை எழுதி வாங்குவதாகவும் பரபரப்பு குற்றம்சாட்டி இருந்தார்.
 
இந்தப் புகார் குறித்து ஈஷா மையத்தில் கேட்டபோது, அந்தப் பெண்கள் விரும்பியே இங்கு தங்கியிருப்பதாகத் தெரிவித்தர். அந்தப் பெண்கள் விரும்பினால் பெற்றோருடன் செல்லலாம் என்றும் யாரும் அவர்களைத் தடுக்கவில்லை என்றும் நிர்வாகி ஒருவர் கூறி இருந்தார்.
 
இந்நிலையில், அப்பெண்களின் தாயார் சத்யவதி, ஈஷா யோகா மையத்தில் தனது 2 மகள்கள் கட்டாயப்படுத்தி தங்க வைக்கப்பட்டிருப்பதாக சென்னை உயர்நீதிமன்றத்தில், ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார்.
 
இம்மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறுகையில், ”லதா, கீதா ஆகியோர் இருவரும் விரும்பி சன்னியாசம் பூண்டிருந்தால், அதில் நீதிமன்றம் தலையிட முடியாது. கட்டாயப்படுத்தி சன்னியாசிகளாக்கப்பட்டிருந்தால் மட்டுமே நடவடிக்கை எடுக்க முடியும்” என்றும் கூறியுள்ளனர்.
 
மேலும், இது தொடர்பாக சம்மந்தப்பட்ட பெண்களிடம் மாவட்ட நீதிபதி விசாரணை நடத்தவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.