வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியுநாடன்
Last Updated : வெள்ளி, 15 ஜூலை 2016 (10:31 IST)

ரூ. 371 கோடி நிலம் ஆக்கிரமிப்பு - எஸ்.ஆர்.எம். பாரிவேந்தருக்கு நோட்டீஸ்

ரூ. 371 கோடி மதிப்புள்ள நிலங்களை ஆக்கிரமிப்பு செய்ததாக அளிக்கப்பட்டுள்ள புகாரை அடுத்து எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக வேந்தர் பச்சமுத்து என்ற பாரிவேந்தருக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
 

 
ஆதிதிராவிடர்களுக்காக காஞ்சிபுரம் மாவட்டம் காட்டாங்கொளத்தூரில் ஒதுக்கப்பட்ட ரூ.371 கோடி மதிப்புள்ள நிலத்தை எஸ்.ஆர்.எம். பல்கலைக் கழகத்திற்காக பாரிவேந்தர் பச்சமுத்து ஆக்கிரமித்துள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
 
இந்த வழக்கில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் மற்றும் பாரிவேந்தருக்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர்நீதிமன்றம் வியாழனன்று (ஜூலை 14) உத்தரவிட்டுள்ளது.
 
காஞ்சிபுரம் மாவட்டம் ஓட்டேரி கிராமத்தைச் சேர்ந்த சதீஷ்குமார் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றினை தாக்கல் செய்துள்ளார்.
 
அதில், “காஞ்சிபுரம் மாவட்டம் காட்டாங்கொளத்தூரில் ஆதிதிராவிடர்களுக்கு நிலம் ஒதுக்கப்பட்டிருந்தது. பஞ்சமி நிலம் என்று அழைக்கப்படும் இந்த நிலத்தை கடந்த பல ஆண்டுகளாக எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம் ஆக்கிரமித்து வைத்துள்ளது. இந்த நிலத்தின் மதிப்பு ரூ.371 கோடியாகும்.
 
இந்த ஆக்கிரமிப்பு நிலத்தில் இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் இடம், வாலிபால் மற்றும் டென்னிஸ் கோர்ட் மற்றும் 2 ஓட்டல்களையும் எஸ்.ஆர்.எம். நடத்தி வருகிறது. மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள ஆதிதிராவிட மக்களுக்காக வழங்கப்பட்ட இந்த நிலத்தை அரசு விதிகளுக்கு முரணாக எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம் பயன்படுத்தி வருகிறது.
 
எனவே இந்த நிலத்தை அரசுமீட்க வேண்டும் எனக் கோரி கடந்த 2012இல் முதல்வரின் தனிப்பிரிவில் மனு கொடுத்தேன். எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதையடுத்து, காஞ்சிபுரம் மாவட்டக் கலெக்டர், செங்கல்பட்டு தாசில்தார், காட்டாங்கொளத்தூர் பஞ்சாயத்து யூனியன் தலைவர், காஞ்சிபுரம் மாவட்ட பொதுப்பணித்துறை செயல் பொறியாளர் ஆகியோருக்கு கடந்த ஜூன் 23 மற்றும் 24ம் தேதிகளில் பதிவுத் தபாலில் மனு அனுப்பினேன்.
 
அவர்களும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே ஆதிதிராவிடர்களுக்காக ஒதுக்கப்பட்ட இந்த நிலத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ள எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்திடமிருந்து மீட்குமாறு அரசுக்கு உத்தரவிட வேண்டும். நிலத்தை ஆக்கிரமிப்பு செய்த எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தின் வேந்தர் பாரிவேந்தர் மீது நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
 
இந்த மனு தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், நீதிபதிமகாதேவன் ஆகியோர் அடங்கிய முதன்மை அமர்வு முன்பு வியாழனன்று (ஜூலை 14) விசாரணைக்கு வந்தது.
 
மனுவை விசாரித்த நீதிபதிகள், மனுவுக்கு செப். 22ஆம் தேதிக்குள் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர், காஞ்சிபுரம் மாவட்ட பொதுப்பணித்துறை செயற்பொறியாளர், காட்டாங்கொளத்தூர் பஞ்சாயத்து யூனியன் தலைவர், எஸ்ஆர்எம் பல்கலைக்கழக வேந்தர் பச்சமுத்து என்கிற பாரிவேந்தர் உள்ளிட்ட 6 பேர் பதிலளிக்கக் கூறி நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.