வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : திங்கள், 14 நவம்பர் 2016 (14:27 IST)

ஒரே நாளில் கோடிக் கணக்கில் குவிந்த வரிப்பணம் - செல்லாத நோட்டு அறிவிப்பால் அமோகம்

பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாத என்ற அறிவிப்பு காரணமாக, சென்னை மாநகராட்சி ஒரே நாளில் ரூ.7 கோடியே 21 லட்சம் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.


 

பிரதமர் நரேந்திர மோடி கடந்த 08ஆம் தேதி இரவு 8 மணிக்கு 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. கருப்பு பணத்தை ஒழிக்க புதிய 500, 2000 ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து, வியாழக்கிழமை [10-11-16] முதல் மக்கள் வங்கிகளில் பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றி வருகின்றனர். இதன்மூலம் வரி செலுத்தாமல் கணக்கில் வராத பணங்களை மாற்றும் போது அவர்கள் மாட்டிக் கொள்வார்கள் என கருதப்பட்டது.

இதனையடுத்து, உயர் மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் தங்களிடம் உள்ள பணத்தை நகையாக மாற்றும் முயற்சியிலும் தீவிரமாக இறங்கினர்.

இதையடுத்து கையில் உள்ள பணத்தை வங்கியில் மாற்றலாம், பெட்ரோல் பங்க், சுங்கச்சாவடி, மின்வாரிய அலுவலகம், நகராட்சி, மாநகராட்சி, பேரூராட்சி, ஒன்றிய அலுவலகங்களில் வரி செலுத்துவோர், செல்லாத பணத்தை கொடுக்கலாம் என அரசு அறிவித்தது.

இதைதொடர்ந்து கையில் பணம் வைத்து இருந்தும், இதுவரை வரி செலுத்தாமல் இருந்த ஏராளமானோ, தங்களது வீடு, நிலம், சொத்துக்களுக்கான வரிகளை தானே முன்வந்து செலுத்துகின்றனர்.

இந்நிலையில், சென்னை மாநகராட்சியில் ஒரே நாளில் ரூ.7 கோடியே 21 லட்சம் வசூலாகி சாதனை படைத்துள்ளது.

மேலும், கடந்த 8ஆம் தேதி முதல் இருந்து சென்னை மாநகராட்சி வரி வசூல் செய்ய சிறப்பு முகாம்களை நடத்தி வருகிறது. அதன்படி விடுமுறை நாளான நேற்று வரி வசூல் மையங்கள் செயல்பட்டன. அதில் செல்லாது என அறிவிக்கப்பட்ட 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் ஏற்றுக் கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த அறிவிப்பை தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்ற போதிலும், சென்னை மக்கள் வரி செலுத்த குவிந்தனர். சிறப்பு முகாம்களில் மக்கள் கூட்டம் அலை மோதியது. இதன் மூலம் நேற்று ஒரு நாளில் மட்டும் ரூ.7.21 கோடி வரி வசூல் ஆனதாக மாநகராட்சி அதிகாரிகள் கூறுகின்றனர்.