வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By vm
Last Updated : சனி, 23 பிப்ரவரி 2019 (12:14 IST)

செயின் வழிபறி...கணவனை நம்ப வைக்க பொய் சொன்ன பெண்! சிசிடிவி காட்சிகளால் சிக்கினார்

சென்னை: செயினை வழிபறி கொள்ளையர்கள் பறித்து கொண்டு தப்பிவிட்டதாக கணவனிடம் பொய் சொன்ன பெண், சிசிடிவி கேமரா காட்சிகளால் சிக்கினார்.
சென்னை கேகே நகர் கண்ணிகாபுரத்தை சேர்ந்தவர் பழனி. இவரது மனைவி சுமித்ரா. இவர் வியாழக்கிழமை இரவு  போலீசில் புகார் அளித்தார். அதில் மகனுக்கு மதியம் சாப்பாடு கொடுத்து விட்டு வரும் போது, முகத்தை மறைத்தபடி கர்சிப் அணிந்து பைக்கில் வந்த இரண்டு பேர் பாலசுப்பிரமணியன் சாலை, சிவலிங்க புரத்தில் வழிமறித்து பேசினார்கள். 
 
அவர்கள் என்னிடம் அட்ரஸ் கேட்பது போல் பேசி, என் கழுத்தில் இருந்த செயினை பறித்து கொண்டு பைக்கில் தப்பிவிட்டனர் என்று கூறியிருந்தார். இந்த புகாரை ஏற்று வழக்கு பதிவு செய்த போலீசார், அந்த பகுதியில் இருந்த 15 சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். ஆனால் அப்படி மாஸ்க் அணிந்தபடி யாரும் வரவில்லை. சுமித்ரா மட்டும் பான் புரோக்கர் கடையில் இருந்து வந்துள்ளார். 
 
இதையடுத்து சுமித்ராவிடம் தீவிர  விசாரணை செய்த போலீசார், அவர் பொய் சொன்னதை கண்டு பிடித்தனர். கணவருக்கு தெரியாமல் சுமித்ரா நகை அடகுக்கடையில் செயினை ரூ.90 ஆயிரத்துக்கு அடகு வைத்துள்ளார். அந்த பணத்தை தனது நண்பருக்கு கொடுத்துள்ளார்.  
 
பின்னர் கணவனை நம்ப வைப்பதற்காக போலீசில் செயின் பறிப்பு சம்பவம் நடந்ததாக சுமித்ரா புகார் அளித்துள்ளார். விசாரணையில் மேற்கண்ட தகவல் வெளியானதால் ,  சுமித்ரா மன்னிப்பு கேட்டு போலீசிடம் கெஞ்சினார். இதையடுத்து போலீசார் மன்னிப்பு கடிதம் எழுதி வாங்கி கொண்டு எச்சரித்து அனுப்பி வைத்தனர்.