எம்.ஆர்.விஜயபாஸ்கரின் வீட்டில் சிபிசிஐடி போலீசார் சோதனை.. தம்பி சேகர் வீட்டிலும் சோதனை..!
கரூரில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் வீடு மற்றும் அலுவலகங்களில் சிபிசிஐடி போலீசார் சோதனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
கரூர் - கோவை ரோடு என்.எஸ்.ஆர் நகர் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள எம்.ஆர்.விஜயபாஸ்கரின் வீட்டில் சோதனை நடைபெற்று வருவதாகவும், அதுமட்டுமின்றி ரெயின்போ நகரில் உள்ள சாயப்பட்டறை அலுவலகம், ரெயின்போ அப்பார்ட்மெண்டில் உள்ள முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் தம்பி சேகர் வீடு உள்ளிட்ட இடங்களிலும் சிபிசிஐடி அதிரடி சோதனை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.
முன்னதாக கரூரில் ரூ.100 கோடி மதிப்பிலான நிலத்தை அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் முறைகேடாக பத்திரப்பதிவு செய்ததாக கரூர் எஸ்பி அலுவலத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இந்த புகாரின் அடிப்படையில் கரூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்த நிலையில் இந்த வழக்கு திடீரென சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டது. இந்த நிலையில் எம்.ஆர்.விஜயபாஸ்கர் முன் ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்த நிலையில் அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனையடுத்து எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமறைவாக இருப்பதாக கூறப்படும் நிலையில் இன்று திடீரென எம்.ஆர்.விஜயபாஸ்கரின் வீடு, அலுவலகங்களில் சிபிசிஐடி போலீசார் சோதனை செய்து வருகின்றனர்.
Edited by Siva