வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Updated : ஞாயிறு, 6 செப்டம்பர் 2015 (16:30 IST)

கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா கூறியிருப்பது அகம்பாவத்தின் அடையாளம்: ராமதாஸ் கண்டனம்

தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடமுடியாது என்று கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா கூறியிருப்பது அகம்பாவத்தின் அடையாளம் என்ற பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
 
இது குறித்து ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
 
சம்பா சாகுபடிக்காக காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விட முடியாது என்று கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா கூறியிருக்கிறார். நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை மதிக்காமலும், இரு மாநில மக்களிடையே நிலவும் நல்லுறவை குலைக்கும் வகையிலும் அவர் இவ்வாறு பேசியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
 
தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்து விடாததற்காக கர்நாடக முதலமைச்சர் கூறியுள்ள காரணங்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை. கர்நாடகத்தில் மழை பெய்து அணைகள் நிரம்பினால் மட்டுமே காவிரியில் தண்ணீர் திறக்கப்படும் என்று சித்தராமையா கூறியிருப்பது அகம்பாவத்தின் அடையாளம் ஆகும்.
 
அதாவது நடுவர் மன்றத் தீர்ப்பை மதிக்க முடியாது; தமிழகத்தை வடிகாலாக மட்டுமே பயன்படுத்துவோம் என்பதைத் தான் சித்தராமையா வேறு வார்த்தைகளில் கூறியிருக்கிறார். தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசில் நீர்வளத் துறை அமைச்சராக இருக்கும் உமாபாரதி, கடந்த 2014 ஆம் ஆண்டு ஜூன் மாதமே காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் என்று அறிவித்தார்.
 
அதன்பின் 15 மாதங்களாகியும் அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. கர்நாடகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர்களின் நெருக்கடிக்கு பணிந்து மேலாண்மை வாரியம் அமைக்கும் முடிவை அரசு கிடப்பில் போட்டிருக்கிறது. இது தமிழகத்திற்கு இழைக்கப்படும் துரோகம் ஆகும்.
 
ஒரு கண்ணுக்கு வெண்ணெய், ஒரு கண்ணுக்கு சுண்ணாம்பு அணுகு முறையை மத்திய அரசு கைவிட வேண்டும். கர்நாடக முதல்வருடன் பேசி காவிரியில் தண்ணீர் திறக்குமாறு ஆணையிடுவதுடன், மேலாண்மை வாரியத்தையும் அமைக்க பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 
அதேபோல், காவிரி பிரச்சினையில் பிரதமருக்கு கடிதம் எழுதுவது மட்டுமே கடமை என்ற அணுகு முறையை தமிழக முதலமைச்சர் மாற்றிக் கொள்ள வேண்டும்.
 
அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி, அதில் எடுக்கப்படும் முடிவை பிரதமரிடம் தெரிவிப்பது உள்ளிட்ட அரசியல் ரீதியாக மத்திய அரசுக்கு அழுத்தம் தரும் நடவடிக்கைகளை மேற்கொள்ள முதலமைச்சர் ஜெயலலிதா முன்வர வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் ராமதாஸ் கூறியுள்ளார்.