செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 24 ஆகஸ்ட் 2020 (18:52 IST)

கைலாசாவில் ஹோட்டல்; நித்தி-க்கு கொக்கி போட்ட குமார் மீது புகார்!!

டெம்பிள் சிட்டி குமார் இந்திய அரசுக்கு எதிராக செயல்பட்டதாக மதுரையில் புகார் பதிவாகியுள்ளது. 
 
பிரபல சாமியார் நித்யானந்தா தனக்கென தனியாக கைலாசா என்ற தீவை உருவாக்கியுள்ளதாக கூறியதிலிருந்து பரபரப்பாக உற்று நோக்கப்பட்டு வருகிறார். அடிக்கடி வீடியோ வெளியிட்டு வரும் நித்யானந்தா நெட்டிசன்கள் மத்தியில் ட்ரெண்டிங்க் ஆகவும் உள்ளார். 
 
இந்நிலையில் சமீபத்தில் கைலாசாவிற்கு ரிசர்வ் பேங்க் ஆப் கைலாசா திறக்கபோவதாக அறிவித்தது கைலாசாவிற்கு புதிய தங்க நாணயத்தை (Kailashian Dollars) நித்யானந்தா அறிமுகப்படுத்தினார். இந்த காசுகளை கொண்டு உலகின் 56 இந்து நாடுகளோடு வர்த்தகம் செய்ய உள்ளதாகவும் தெரிவித்தார். இதை தொடர்ந்து விரைவில் கைலாசா நாட்டிற்கான பாஸ்போர்ட் குறித்த அறிவிப்பும் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது.
 
இந்நிலையில் மதுரையைச் சேர்ந்த டெம்பிள் சிட்டி ஹோட்டல் உரிமையாளரும் மதுரை மாவட்ட ஹோட்டல் சங்கத்தின் தலைவருமான குமார் தனது ஹோட்டலை கைலசாவில் திறக்க அனுமதி கேட்டு நித்யானந்தாவிற்கு கடிதம் எழுதினார். இதற்கு நித்தியாநந்தா விரைவில் அனுமதி அளிக்கப்படும் எனவும் பதில் அளித்தார். 
 
இதனிடையே டெம்பிள் சிட்டி குமார் இந்திய அரசுக்கு எதிராக செயல்பட்டதாகவும், பாலியல் வழக்கு குற்றவாளியான நித்தியாநந்தாவை ஆதரிப்பதாவும் எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என மதுரை ஆட்சியர் மற்றும் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.