வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Modified: வெள்ளி, 12 செப்டம்பர் 2014 (08:46 IST)

சரக்கு-சேவை வரி விதிப்பில் கருத்தொற்றுமை தேவை: அருண் ஜேட்லிக்கு ஜெயலலிதா கடிதம்

சரக்குகள்-சேவை வரி சட்டத் திருத்த விவகாரத்தில் மாநில அரசுகளுடன் ஆலோசனை நடத்தி கருத்தொற்றுமையை ஏற்படுத்த வேண்டும் என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லிக்கு முதலமைச்சர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.

இதுகுறித்து அருண் ஜேட்லிக்கு ஜெயலலிதா எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

கடந்த ஜூன் 3 ஆம் தேதி தங்களிடம் நான் நேரில் அளித்த மனுவில், உத்தேசிக்கப்பட்டுள்ள சரக்குகள்-சேவை வரி தொடர்பாக, தமிழகம் பாதிக்கப்படும் சூழ்நிலை இருப்பதைக் குறிப்பிட்டிருந்தேன்.

இதையடுத்து, சரக்குகள்-சேவை வரி தொடர்பான திருத்தப்பட்ட அரசியல் சட்ட வரைவு மசோதாவைக் கடந்த ஜூன் மாதம் 20 ஆம் தேதி, மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அனுப்பி வைத்திருந்தது. இதில் இந்த வரைவு மசோதாவில், தாம் தெரிவித்திருந்த சில முக்கியப் பிரச்னைகளுக்கு தீர்வு காணப்பட்டிருந்தது.

இந்த நிலையில், கடந்த மாதம் 20 ஆம் தேதி நடைபெற்ற மாநில நிதியமைச்சர்களின் மாநாட்டில், சரக்குகள்-சேவை வரி மீதான வரையறை ரூ.10 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டிருப்பது எனது கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. கலப்புத் திட்டத்துக்கான வரையறை ஒரு சதவீத அடிப்படை வட்டியுடன் ரூ.50 லட்சமாக வரையறுக்கப்பட்டுள்ளது.

உள்ளூர் பயன்பாட்டின் மீதான பொருள்களுக்கு இத்தகைய வரி விதிப்பிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும். இரட்டை வரி விதிப்பை தவிர்ப்பதற்காக, ஒன்றரை கோடி ரூபாய் வரை தொழில் ஈட்டும் விநியோகிப்பாளர்களிடம் இருந்து மாநில அரசு பெறும் வரி வருமானத்தில், மத்திய அரசு விலகி இருக்க வேண்டும்.

பெட்ரோலியப் பொருள்களை சரக்கு-சேவை வரியின் கீழ் கொண்டு வருவது மாநில அரசுகளின் வரையறைக்குள்பட்ட வருமானத்தை மேலும் கடுமையாகக் குறைத்துவிடும். பெட்ரோலியப் பொருள்களின் மீது மாநில அரசுகளும், இப்போது உள்ள வரிகளைத் தொடர்ந்து வசூலிக்க அனுமதிப்பது ஏற்புடையதல்ல.

பெட்ரோலியப் பொருள்கள் மீது சரக்கு-சேவை வரியை மிகக் குறைந்த அளவிலோ அல்லது குறைந்தது 3 ஆண்டுகளுக்கு பூஜ்ஜியம் என்ற விகிதத்திலோ விதிக்க மத்திய அரசு தெரிவித்துள்ள யோசனை, தமிழக அரசுக்கு பெருத்த சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாடு இப்போது புகையிலை, அதன் அடிப்படையிலான பொருள்கள் மீது 14.5 சதவீதத்தில் இருந்து 20 சதவீதம் வரை அதிக அளவில் வரி விதித்து வருகிறது.

புகையிலையினால் ஏற்படும் தீமைகளைக் கருத்தில் கொண்டு, புகையிலை, அதன் துணைப் பொருள்கள் மீது கூடுதல் மதிப்புக் கூட்டப்பட்ட வரியை விதிக்குமாறு மத்திய அரசு அனைத்து மாநிலங்களையும் வலியுறுத்தி வருகிறது.

ஆனால், அரசியல் சட்ட திருத்த வரைவு மசோதாவில் புகையிலை, அதனைச் சார்ந்த பொருள்கள் மீது மத்திய அரசுக்கு இணையாக அதிக வரி வசூலிக்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் அளிக்கும் ஷரத்துகள் இடம்பெறவில்லை.

எனவே, புகையிலை, புகையிலைப் பொருள்கள் மீது மாநில அரசுகளும், மத்திய அரசைப் போலவே அதிக அளவில் வரி விதிக்க அதிகாரம் வழங்கப்பட வேண்டும்.

சரக்கு-சேவைகள் வரியை அமல்படுத்தும்போது மாநிலங்களுக்கு ஏற்படும் வருவாய் இழப்பை ஈடுசெய்யும் வகையில், அதற்கென தனியான ஒரு அமைப்பை ஏற்படுத்த வேண்டும். சரக்கு-சேவைகள் வரி தொடர்பான சட்டத்தின் ஒரு பகுதியாக, இழப்பீட்டுக்கான தனியான சட்ட வழிமுறையை உருவாக்கிட வேண்டும்.

இந்தச் சட்ட வழிமுறைகள் அனைத்தும் அரசியலமைப்புச் சட்டத்துக்குள்பட்டு இருக்க வேண்டும். மத்திய அரசின் கொள்கையாக இருக்கும்பட்சத்தில், நேரத்துக்கு நேரம் அது மாறுபடுவதற்கு வழி ஏற்பட்டு விடும்.

சரக்கு-சேவை வரி தொடர்பான அரசியல் சாசன திருத்த மசோதாவை நிறைவேற்றுவதற்கு முன்பாக, இழப்பீடு காலம், வரி வசூலிக்கும் முறை, வரி விதிப்பில் இருந்து விலக்கு அளிக்கப்பட வேண்டிய பொருள்கள், இரட்டை வரி விதிப்பு முறையை நிர்வகிக்கும் அம்சம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து மத்திய அரசு கருத்தொற்றுமையை ஏற்படுத்த வேண்டும்.

இதன் மூலம் மாநிலங்களுக்கு நிரந்தர வருவாய் இழப்பு ஏற்படும் என்ற அச்சத்தை அகற்ற முடியும்“ என்று அந்தக் கடிதத்தில் முதலமைச்சர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லிக்கு அனுப்பிய கடிதத்தின் நகலை, அனைத்து மாநில முதலமைச்சர்களுக்கும் ஜெயலலிதா அனுப்பி வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.