வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : வியாழன், 22 டிசம்பர் 2016 (16:24 IST)

”பொன். ராதாகிருஷ்ணன், நிதின் கட்கரி வீடுகளில் ரெய்டு நடத்த முடியுமா?” - ஆம் ஆத்மி நிர்வாகி சவால்

ராம மோகன் ராவ் வீட்டில் சோதனை நடத்தியது போல பொன். ராதாகிருஷ்ணன், நிதின் கட்கரி வீட்டில் ரெய்டு நடத்த முடியுமா? என ஆம் ஆத்மி நிர்வாகி செந்தில்குமார் சவால் விடுத்துள்ளார்.


 

சென்னை அண்ணாநகரில் அமைந்துள்ள தமிழக அரசின் தலைமைச் செயலாளர் ராம மோகன்ராவ் வீட்டில் நேற்று வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.

அப்போது அப்பகுதியைச் சேர்ந்த ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த செந்தில்குமார், வருமானவரித்துறை சோதனையின்போது என்னையும் சாட்சியாக வைக்க வேண்டும் என்று கூறி முழக்கமிட்டதோடு, அங்கிருந்து சிலரோடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் காவல்துறையினர் செந்தில்குமாரை வெளியே அழைத்துச் சென்றனர்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய செந்தில்குமார், “நான் வருமானவரித்துறை சோதனைக்கு எதிரானவன் அல்ல. ஆனால், இதுபோன்ற ரெய்டுகள், பாஜக ஆளும் மாநிலங்களிலும் நடத்தப்பட வேண்டும்.

தமிழகத்தின் முதல்வரை மக்களால் தேர்வு செய்யப்பட்ட எம்.எல்.ஏ.களும், அதிமுகவும் தான் முடிவு செய்ய வேண்டும். பிரதமர் மோடி நிர்ணயம் செய்யக்கூடாது. இது ரெய்டு கிடையாது. மத்திய அரசு மாநில அரசை மிரட்டும் ஒரு நடவடிக்கையாகும்.

நாட்டில் 14 மாநிலங்களில் பாஜகவின் ஆட்சி நடக்கிறது. அங்கெல்லாம் சோதனைகள் நடத்த துணிச்சல் இருக்கிறதா? மத்திய அமைச்சர்கள் பொன். ராதாகிருஷ்ணன், நிதின் கட்கரி வீடுகளில் ரெய்டு நடத்த முடியுமா?” என்று கேள்வி எழுப்பினார்.