1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Updated : செவ்வாய், 9 ஜூன் 2015 (15:06 IST)

கூடங்குளம் அருகே 50க்கும் மேற்பட்ட நாட்டு வெடிகுண்டுகளை வீசி மீனவர்கள் மோதல்

கூடங்குளம் அருகே உள்ள கூத்தங்குழி கிராமத்தில், மீனவர்களிடையே ஏற்பட்ட மோதலில் 50க்கும் மேற்பட்ட நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டது.
 
திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளம் அணுமின் நிலையம் அருகே கூத்தங்குழி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள மீனவர்கள் இரு குழுக்களாக செயல்பட்டு வருகின்றனர். இதனால், இவர்களுக்குள் அடிக்கடி மோதல் ஏற்படுவதுண்டு.
 
இந்நிலையில், கடந்த 7ஆம் தேதி திருமணம் ஒன்று நடைபெற்ற போது இரு பிரிவினடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் இரு தரப்புக்கும் பலத்தகாயம் ஏற்பட்டுள்ளது.
 
தகவல் அறிந்த காவல்துறையினர் இரு தரப்பையும் அழைத்து சமாதான பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஆனால் இரு தரப்பும் சமாதானம் அடையவில்லை.
 
இந்நிலையில், இன்று அதிகாலையில் கூத்தங்குழி கிராமத்தில் ஒரு பிரிவினர் மீது மற்றொரு பிரிவினர், 50க்கும் மேற்பட்ட நாட்டு வெடிகுண்டுகளை வீசி தாக்கினர். பதிலுக்கு மற்றொரு தரப்பும் நாட்டு வெடிகுண்டை வீசி தாக்குதல் நடத்தியதால், அந்த பகுதியே போர்க்களம் போல் காட்சியளித்தது.
 
தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவம் இடத்திற்கு மீண்டும் விரைந்து சென்று, இச் சம்பவம் தொடர்பாக 2 கல்லூரி மாணவர்கள் உட்பட 7 பேரை கைது செய்தனர்.மேலும் பலரை வலை வீசி தேடி வருகின்றனர். பாதுகாப்பு கருதி அந்த பகுதியில் 100க்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.