வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 2 ஜூலை 2019 (21:06 IST)

இனிமேல் தொலைக்காட்சி விவாதம் கிடையாது: தமிழிசை அதிரடி அறிவிப்பு

கடந்த சில ஆண்டுகளாக தனியார் செய்தி சேனல்களில் அன்றாட அரசியல் நிகழ்வுகள் குறித்து விவாதம் என்ற பெயரில் ஒரு கூத்து நடைபெறுவதுண்டு. நெறியாளர் என்ற பெயரில் உள்ள ஒருவர் நெறியை மறந்து வேண்டுமென்றே சர்ச்சைக்குரிய கேள்விகளை கேட்பதும், விவாதங்களில் கலந்து கொள்பவர்களை கோபமேற்றி அவர்களை உளற வைப்பதும் ஆக்கபூர்வமான கருத்துக்களை சொல்ல வரும்போது திடீரென 'விளம்பர இடைவெளி' என்று கூறுவதும் இந்த நிகழ்ச்சியின் கோமாளித்தனங்களில் சில. பெரும்பாலான தொலைக்காட்சிகள் ஒருதலைபட்சமாகவே இந்த விவாதங்களை நடத்தும் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்திரராஜன் சற்றுமுன் தனது டுவிட்டரில், 'சமீபகாலமாக தொலைக்காட்சி விவாதங்களில் சமநிலையும், சமவாய்ப்பும் இல்லாததால் தற்பொழுது பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் பிரதிநிதிகள் யாரும் கலந்துகொள்ளமாட்டார்கள் என முடிவு செய்யப்பட்டுள்ளது' என்று அதிரடியாக ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
 
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறியிருப்பதாவது: 'தொலைக்காட்சி அரசியல் விவாதங்கள், கட்சிகளின் நிலைப்பாடுகளளயும் கருத்துக்களையும் மக்களிடம் எடுத்து செல்வதற்கு மிகவும் பயனளிப்பதாக உள்ளது. 'சமீபகாலமாக தொலைக்காட்சி விவாதங்களில் சமநிலையும், சமவாய்ப்பும் இல்லாததால் தற்பொழுது பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் பிரதிநிதிகள் யாரும் கலந்துகொள்ளமாட்டார்கள் என முடிவு செய்யப்பட்டுள்ளது' என குறிப்பிட்டுள்ளார். இனிமேல் பாஜகவினர் இல்லாமல்தான் தொலைக்காட்சி விவாதங்கள் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது