திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : செவ்வாய், 31 ஜனவரி 2017 (15:36 IST)

பாஜக பிரமுகர் கள்ளக்காதலால் மரணம் என தெரிந்ததால் பொன்னார் வருகை ரத்து

மர்ம நபர்களால் கொல்லப்பட்டார் என கருதப்பட்ட திருப்பூர் பாஜக பிரமுகர் மாரிமுத்து, கள்ளக்காதலால் தற்கொலை செய்துகொண்டார் எனப் பிரேதப் பரிசோதனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


 

திருப்பூர் வடக்கு மாவட்ட துணை தலைவர் திரு.மாரிமுத்து கடந்த 27ஆம் தேதி அதிகாலை வீட்டிற்கு பின்புறம் உள்ள மாட்டு தொழுவம் அருகில் ஒரு மரத்தில் மர்மமான முறையில் தூக்கில் தொங்கினார்.

மேலும், அவர் தூக்கிட்ட மரத்தின் அருகேயுள்ள ஒரு கம்பத்தில் பிரதமர் மோடியின் புகைப்படம் மற்றும் இந்து முன்னணி, பாஜக கொடியும் கருப்பு கொடி இருந்தது. செருப்பு மாலையும் போடப்பட்டு இருந்தது.

இதனையடுத்து மாரிமுத்துவை மர்ம கும்பல் கொலை செய்து விட்டதாக உறவினர்களும், பா.ஜனதா நிர்வாகிகளும், இந்து முன்னணி தலைவர்களும் குற்றம்சாட்டினர். ஆனால், பிரேதப் பரிசோதனையில் கள்ளக்காதல் விவகாரத்தால் மாரிமுத்து தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.


 

இது குறித்த விசாரணையில், இறந்து போன மாரிமுத்துவுக்கும், பக்கத்து வீட்டு பெண் ஒருவருக்கும் இடையே கள்ளத் தொடர்பு இருந்து வந்துள்ளது. இந்த விஷயம் மனைவிக்கு தெரியவே குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனால் மனமுடைந்த மாரிமுத்து, தற்கொலை செய்து கொண்டுள்ளார். தற்கொலையை மறைப்பதற்காக மனைவியும், பாஜகவினரும் சேர்ந்து மோடி படத்துக்கு மாலைபோட்டதும் அம்பலமாகி உள்ளது.

தற்கொலையை திசை திருப்புவதற்காக பிரதமர் மோடிக்கு செருப்பு மாலை அணிவித்த 2 பேரை பிடித்து காவல் துறையினர் விசாரித்து வருகிறார்கள். இதற்கிடையில் இன்று கண்டனம் தெரிவிப்பதற்காக வருகை தரவிருந்த மத்திய பொன்.ராதாகிருஷ்ணன் வருகையை தவிர்த்தார்.