வாடிக்கையாளரின் பணத்தை காலி செய்த மேனேஜர் – உதவி செய்தது யார் தெரியுமா?
ஆண்டிமடம் அருகே உள்ள சிட்டி யூனியன் வங்கியில் வாடிக்கையாளருக்கேத் தெரியாமல் அவரது பணத்தைக் கையாடல் செய்துள்ளார் வங்கி மேலாளர்.
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணத்தை சேர்ந்தவர் மருதை என்ற ஹார்டுவேர் வியாபாரி. இவர் தன் தொழிலை விருத்தி செய்வதற்காக விளந்தை பகுதியில் சிட்டி யூனியன் வங்கியில் தனது சொத்துகளை அடமானம் வைத்து 2.10 கோடி கடன் வாங்கியுள்ளார். இதற்கு அரசியல் பின்புலம் கொண்ட அவரது நண்பரான வீரெவேல் என்பவர் உதவி செய்துள்ளார்.
கடன் தொகை அவருக்கு 3 தவணைகளாக வழங்கப்படும் என வங்கி மேலாளர் மருதையிடம் தெரிவித்துள்ளார். ஆனால் எந்த தொகையும் அவர் கைக்கு வரவில்லை. ஆனால் கடந்த மூன்று மாதத்தில் அவர் கணக்கில் இருந்து 1.5 கோடி எடுக்கப்பட்டுள்ளதாக அவருக்குத் தெரியவர, வங்கிக்குச் சென்று விசாரிக்க மேனேஜரும் தனது நண்பர் வீரவேலும் சேர்ந்து பணத்தை கையாடல் செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதுபற்றி கேட்டபோது மேனேஜர் விரைவில் தருகிறோம் என சொல்லி இழுத்தடித்துள்ளார். தான் வாங்காத பணத்துக்கு வட்டி கட்ட வேண்டுமா எனக் கேட்ட போது வீரவேல் அரசியல் பின்புலத்தை வைத்து மிரட்டியுள்ளார். இதையடுத்து மருதை குற்றப் பிரிவு போலிஸுக்கு தகவல் சொல்ல விசாரணையை ஆரம்பித்துள்ளனர் அதிகாரிகள். ஆனால் வங்கி மேலதிகாரிகளோ மருதை கையாடல் செய்யப்பட்ட பணத்தை விடுத்து மீதிப் பணத்தைக் கட்டினால் போதுமென சொல்லியுள்ளனர். இப்போது போலீஸார் வீரவேல் மற்றும் வங்கி மேலாளர் சூரிய நாராயணன் ஆகியோரை விசாரிக்க உள்ளனர்.