ஏ.டி.எம். மையங்களில் செலுத்தப்படும் பணத்தை ஊழியர்களே ரகசிய குறியீட்டு எண்ணை பயன்படுத்தி கொள்ளையடித்துள்ள சம்பவம் வங்கி அதிகாரிகள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகம் முழுவதும் வங்கி ஏ.டி.எம். எந்திரங்களில் பணம் நிரப்பும் பணியை தனியார் நிறுவனங்களே மேற்கொண்டு வருகின்றன. இதற்காக வங்கிகளிடமிருந்து கோடிக்கணக்கான பணத்தை பெற்றுக் கொள்கின்றன. பாதுகாப்பு நிறுவனங்கள் தங்களது வாகனங்களிலேயே இந்த பணத்தை எடுத்துச் சென்று ஏடிஎம் மையங்களுக்கு செல்வார்கள்.
வங்கி ஏடிஎம்-மில் இருந்து ரகசிய குறியீட்டு எண்ணை பயன்படுத்தியே வாடிக்கையாளர்கள் பணம் எடுப்பது போல், ஏடிஎம் இயந்திரத்தில் மொத்தமாக பணம் போடுவதற்கும் தனியார் நிறுவனங்கள் ரகசிய குறியீட்டு எண்ணை பயன்படுத்தி வருகின்றன.
இந்த ரகசிய குறியீட்டு எண்ணை பதிவு செய்தால் மட்டுமே ஏடிஎம் இயந்திரத்தை திறக்க முடியும். இந்த எண் பாதுகாப்பு நிறுவனத்தில் பணிபுரியும் அனைவருக்கும் தெரிந்திருக்காது. நம்பிக்கையான சில நபர்களை மட்டுமே தனியார் நிறுவனம் பணியில் அமர்த்தி இருக்கும். அவர்களுக்கே ரகசிய குறியீட்டு எண் தெரிந்திருக்கும்.
இந்நிலையில், சென்னை மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் இதுபோன்ற பணியில் இருந்த தனியார் நிறுவன ஊழியர்களே லட்சக்கணக்கான பணத்தை சுருட்டியுள்ளனர்.
ஏடிஎம் மையங்களில் செலுத்தப்படும் பணத்தை இந்த ஊழியர்களே ரகசிய குறியீட்டு எண்ணை பயன்படுத்தி கொள்ளையடித்துள்ளனர். இந்த துணிகர கொள்ளைச் சம்பவம் வங்கி அதிகாரிகள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை ஆவடி டேங்க்பேக்டரி பகுதியில், குறிப்பிட்ட 3 ஏடிஎம் மையங்களில் 42 லட்ச ரூபாய் பணம் அபேஸ் செய்யப்பட்டிருந்தது. இதனை கடந்த ஜூன் மாதம் கண்டுபிடித்தனர். அதில் டில்லிகுமார் என்ற வாலிபரே ரகசிய குறியீட்டு எண்ணை பயன்படுத்தி இந்த பணத்தை எடுத்திருப்பதாக கூறப்பட்டிருந்தது.
இதனையடுத்து டில்லிகுமாரை காவல் துறையினர் தேடி வந்தனர். கடந்த 4 மாதங்களாக தலைமறைவாக இருந்த டில்லிகுமாரை காவல் துறையினர் சனிக்கிழமை கைது செய்தனர்.
டில்லிகுமார் காவல்துறையினரிடம் அளித்த வாக்குமூலத்தில், திருவள்ளூரிலும், 4 ஏடிஎம் மையங்களில் 27 லட்ச ரூபாய் கொள்ளையடித்திருப்பதாக கூறியுள்ளார். இதன் மூலம் இவர் சென்னை மற்றும் திருவள்ளூரில் ஏடிஎம்-மில் இருந்து 69 லட்ச ரூபாய் பணத்தை சுருட்டியிருப்பது அம்பலமாகி உள்ளது.
அதேபோல திருவண்ணாமலை மாவட்டத்திலும் ரகசிய குறியீட்டு எண்ணை பயன்படுத்தி 14.5 லட்ச ரூபாயை கொள்ளையடித்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். திருவண்ணாமலை தாமரை நகரில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில், போளூர் அருகே உள்ள கண்ணனூரை சேர்ந்த டில்லிபாபு மற்றும் வேலு ஆகியோர் இந்த நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தனர்.
அவர்கள் ஏடிஎம்-களில் இருந்து லட்சக்கணக்கான ரூபாய் கொள்ளை போனது தெரிய வந்தது. பணம் நிரப்பும் ஊழியர்களே ஏடிஎம்-களில் நிரப்பிய பணத்தை ரகசிய குறியீட்டு எண்ணை பயன்படுத்தி கொள்ளையடித்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இவர்கள் பணத்தை நிரப்பிவிட்டு சிறிது நேரம் கழித்து வந்து, ரகசிய எண்ணை பயன்படுத்தி கடந்த 2 மாதங்களாக தங்களது கட்டுப்பாட்டில் இருந்த 20 ஏடிஎம்-களிலும் பணத்தை திருடி உள்ளனர். டில்லிபாபுவும், வேலுவும் இதுவரை சுமார் 14 லட்ச ரூபாயை எடுத்திருப்பது தெரிய வந்தது.