செவ்வாய், 25 பிப்ரவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : செவ்வாய், 28 ஜூன் 2016 (10:42 IST)

ஜெ. வழக்கின் அவப்பெயர் உச்சநீதிமன்றத்திற்கு எச்சரிக்கை - கருணாநிதி

சொத்துக் குவிப்பு மேல் முறையீட்டு வழக்கையே மூன்று மாதங்களுக்குள் விசாரித்து முடிக்குமாறு, உயர்நீதிமன்றத்திற்கு உத்தரவிட்ட நிகழ்வு, நீதித்துறைக்கு அவப்பெயரை ஏற்படுத்தியுள்ளது என்று அவர் தெரிவித்திருப்பது, உச்சநீதிமன்றத்திற்கு கொடுக்கப்பட்டுள்ள “எச்சரிக்கை" என்றே நான் கருதுகிறேன் என்று திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
 

 
இது குறித்து கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில், ”ஐதராபாத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய  கர்நாடக லோக் ஆயுக்தாவின் முன்னாள் தலைவரும், மத்திய அரசின் முன்னாள் சொலிசிட்டர் ஜெனரலும், ஓய்வு பெற்ற இந்திய உச்சநீதிமன்ற நீதிபதியுமான சந்தோஷ் ஹெக்டே, “பணபலமும், செல்வாக்கும் இருந்தால் எவரும் சட்டத்தின் ஓட்டைகளைப் பயன்படுத்தி தப்பித்து விடலாம் என்று பொதுமக்கள் கருதுகின்றனர். அது தனக்கு உடன்பாடான கருத்துதான்" என்று கூறியிருக்கின்ற செய்தி ஒரு சில நாளேடுகளில் வெளிவந்துள்ளது.    
 
14 ஆண்டுகளுக்கும் மேலாக இழுத்தடிக்கப்பட்ட சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட ஜெயலலிதாவுக்கு கர்நாடக உயர் நீதி மன்றம் உடனடியாக ஜாமீன் வழங்க மறுத்த நிலையில், உச்ச நீதி மன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியதோடு மட்டுமன்றி, மேல் முறையீட்டு வழக்கையே மூன்று மாதங்களுக்குள் விசாரித்து  முடிக்குமாறு, உயர்நீதிமன்றத்திற்கு உத்தரவிட்ட நிகழ்வு, நீதித்துறைக்கு அவப்பெயரை ஏற்படுத்தியுள்ளது என்று அவர் தெரிவித்திருப்பது, உச்சநீதிமன்றத்திற்கு கொடுக்கப்பட்டுள்ள “எச்சரிக்கை" என்றே நான் கருதுகிறேன்.
 
இதேபோன்று, நிதானமின்றி காரை ஓட்டிச் சென்றதால்  சாலையோரவாசி மரணமடைந்த வழக்கில், நடிகர் சல்மான்கானை விடுவித்ததும், நீதித்துறைக்குக் களங்கம் ஏற்படுத்தக் கூடியது என்றும், குறிப்பாக இரண்டு வழக்குகளிலும், ஓய்வுபெறும் நிலையில் இருந்த நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளதையும் திரு. சந்தோஷ் ஹெக்டே சுட்டிக் காட்டியிருக்கிறார்.
 
பல்வேறு வழக்குகளில் ஜாமீன் கிடைக்காமல் நூற்றுக்கணக்கானோர்  4 முதல் 5 ஆண்டுகள் வரை சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் நிலையில், பணக்காரர்கள், செல்வாக்கு மிக்கவர்கள் என்பதாலேயே ஜெயலலிதா, சல்மான்கான் ஆகிய இருவரின் மனுக்களும் அவசர அவசரமாக  விசாரிக்கப்பட்டதாகவும் நீதிபதி சந்தோஷ் ஹெக்டே கூறியுள்ளார். 
 
குறிப்பாக வழக்கத்திற்கு மாறான வகையில் அவசரமாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளும் அளவிற்கு, இவர்கள் என்ன தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டு மரணத்தை எதிர்நோக்கியிருந்தவர்களா? அல்லது பரிட்சை எழுத ஹால் டிக்கெட் கிடைக்காமல் பரிதவித்தவர்களா என்றும் நீதிபதி ஹெக்டே கேட்டுள்ளார்.
 
நீதிமன்றத் தீர்ப்புகள் பற்றி மக்கள் கேள்வி கேட்கத் தொடங்கி விட்டதாகவும், இதுபோன்ற வழக்குகள் மக்கள் மத்தியில் தவறான எண்ணத்தையே ஏற்படுத்தும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். அவர் இவ்வாறு திடீரென்று தெரிவிக்க என்ன காரணம்?
 
கர்நாடக அரசுத் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தவே வாதிடும்போது, “விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்பை மாற்றுவதற்கு உரிய காரணங்களை ஐகோர்ட் நீதிபதி குறிப்பிடவில்லை. ஐகோர்ட் தீர்ப்பை ரத்து செய்யாவிட்டால்,  ஊழலை ஒழிக்கக் கொண்டுவரப்பட்ட லஞ்ச ஒழிப்பு சட்டத்தின் நோக்கமே பயனற்றதாகிவிடும். அதேபோல, ஊழல் வழக்கில் இருந்து தப்பிவிடலாம் என்ற சமிக்ஞையை அரசு ஊழியர்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும் அளித்துவிடும்" என்று வாதிட்டபோது, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குறுக்கிட்டு, “எங்களுக்கு மூன்று வாய்ப்புகள் உள்ளன.
 
ஒன்று, ஜெயலலிதாவை விடுதலை செய்து ஐகோர்ட் பிறப்பித்த  தீர்ப்பை உறுதி செய்யலாம்; இரண்டு, அந்தத் தீர்ப்பை ரத்துசெய்து, தண்டனையை உறுதி செய்யலாம்; வழக்கை மீண்டும் ஐகோர்ட்டுக்கு திருப்பி அனுப்புவது அல்லது விசாரணை நீதிமன்றத் தீர்ப்பு தவறு எனத் தெரியவந்தால், அந்தத் தீர்ப்பை ரத்து செய்து, மறு விசாரணைக்கு உத்தரவிடலாம்.
 
வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்கள் சேர்ப்பது குற்றமல்ல;  சொத்துக்கள் சட்டப்பூர்வமான வருமானத்தில் வாங்கப்படவில்லை என, அரசுத் தரப்பு நிரூபிக்க முடியும் என்றால் மட்டுமே அது குற்றம் ஆகிறது" என்று இதுவரை இல்லாத புதுமையான கருத்து தெரிவித்ததால்தான் அதாவது வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்கள் சேர்ப்பது குற்றமல்ல என்றும்; அது குற்றம் என்பதை அரசுத் தரப்பு நிரூபிக்க வேண்டும் என்றும் இந்த வழக்கை விசாரிக்கும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளே வெளிப்படையாக அறிவித்ததால்தான் கர்நாடக நீதிபதி திரு. ஹெக்டே அவர்கள்  இவ்வாறு கருத்து தெரிவித்திருக்கக் கூடுமோ என்ற அய்யம் கூட நமக்கு ஏற்படுகின்றது.
 
சொத்துக் குவிப்பு வழக்கில் சிறை தண்டனையை எதிர்த்து  ஜெயலலிதா தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை  கர்நாடக உயர் நீதிமன்றம் விசாரித்ததே தவறு என உத்தரவிடக் கோரி மூத்த வழக்கறிஞர் பர்மானந்த் கட்டாரா உச்ச நீதிமன்றத்திலே கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு மனுவினைத் தாக்கல் செய்திருக்கிறார்.   அவ்வாறு தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு  ஏற்றுக் கொண்டுள்ளது. இந்த மனுவையும் நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், அமித்தவா ராய் தலைமையிலான அமர்வு விசாரிக்கும் என்று உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.
 
10-3-2016 அன்று உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் பர்மானந்த் கட்டாரா உச்ச நீதிமன்றத்தில் ஓர் இடை மனுவை தாக்கல் செய்தார். அந்த மனுவில், குற்றவியல் நடைமுறைச் சட்டம் 374 (2)ன்படி, ஓர் வழக்கில் 7 ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை வழங்கினால்தான், அந்த வழக்கில் மேல் முறையீடு செய்ய முடியும். சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை மட்டுமே  வழங்கி விசாரணை நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் அந்த வழக்கில் திருத்த மனு (ரிவிஷன்) தான் தாக்கல் செய்திருக்க வேண்டும். மேல்முறையீடு செய்திருக்கக் கூடாது. எனவே இந்த வழக்கில் தவறாக மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்திருக்கிறார். இதற்கும் என்ன பதில் என்று இதுவரை தெரியவில்லை; எனினும் சொத்துக் குவிப்பு வழக்கு, தீர்ப்புக்காக  ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது.
 
சொத்துக் குவிப்பு வழக்கில் கர்நாடக அரசு தரப்பு வழக்கறிஞர் திரு. ஆச்சார்யா அவர்களின் வாதம் பாராட்டுக்குரியது; வழக்கிற்கு ஒளியூட்டக் கூடியது. பல்வேறு கருத்துகளை உறுதியான ஆதாரத்தோடு எடுத்து வைத்து,  நீதியும் நியாயமும் பாதுகாப்பாக நிலைத்திட வேண்டும் என்பதற்காகப் பெரும் பாடுபட்டிருக்கிறார்.
 
அரசியல் சாசன அமர்வுக்குக் காரணமான இந்த வழக்கிலே, உச்ச நீதிமன்ற நீதிபதி மதன் பி. லோகுர் அவர்கள், “ஒரு கிரிமினல் வழக்கை எப்படி நடத்தக் கூடாது என்பதற்கு இந்த மேல் முறையீடு  வழக்கு ஒரு சான்று.
 
மேலும் அதிகாரமும், செல்வாக்கும் மிக்கவர்கள் எப்படி நீதி வழங்கும் முறையில் தலையிட்டு தங்கள் விருப்பத்திற்கேற்ப அதை வளைத்திட முடியும் என்பதற்கும் இந்த வழக்கே சான்றாகும்.   கிரிமினல் வழக்குகளில் நீதி வழங்கும் முறை தோற்று விட்டது.   இதைச் சீர்படுத்த வேண்டும். அதற்கான நேரம் வந்து விட்டது" என்று தெரிவித்திருந்தார்.
 
(In a strongly-worded Judgement, Justice Lokur separately observed that Bhavani Singh's continuation as prosecutor in the appeals was a sign of the "failure of criminal justice delivery system" and entire appeals proceedings stands vitiated. Justice Lokur observed that it indicated how persons in power with influence could "manipulate" the criminal justice delivery system.
 
Justice Lokur said the fact that the trial went on for 15 years is itself unfortunate proof that justice delivery system has become a tool in the hands of the influential and powerful.
 
He said the time to correct this malaise is now as this case is a "classic illustration" of what is wrong with justice dispensation in the country.)
 
உச்சநீதிமன்ற நீதிபதி மதன் பி. லோகுர் அவர்கள் சொன்னபடி, நீதி வழங்கும் முறை தோற்றுவிட்டதா அல்லது அதனைச் சீர்படுத்தும் நேரம் வந்து அதற்கான முன்னுரை எழுதப்பட்டு விட்டதா என்பதை சில நாட்கள் பொறுத்திருந்து தான் புரிந்து கொள்ள வேண்டும். ஆனால் ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி மதன் பி. லோகுர் அவர்களும், மற்றொரு ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி  சந்தோஷ் ஹெக்டே அவர்களும் சொத்துக் குவிப்பு வழக்கு பற்றி இவ்வாறெல்லாம் கருத்துத் தெரிவிக்க என்ன காரணம், அவர்களுக்கு ஏதாவது சந்தேகம் ஏற்பட்டுள்ளதா என்று நமக்கெல்லாம் அய்யம் ஏற்படுவது நியாயம் தானே?
 
மிக முக்கியத்துவம் வாய்ந்த இந்தச் சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பு எவ்வாறு அமையப் போகிறது என்பதை  இந்தியாவில் உள்ள சட்ட நிபுணர்களும், அரசியல்வாதிகளும், பத்திரிகையாளர்களும் எல்லாவற்றுக்கும் மேலாக  பொதுமக்களும் கூர்ந்து கவனித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் உண்மை!