1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Updated : வியாழன், 2 அக்டோபர் 2014 (07:58 IST)

ஆயுத பூஜை மற்றும் விஜய தசமி: ஆளுநர் வாழ்த்து

ஆயுத பூஜை மற்றும் விஜய தசமிக்கு ஆளுநர் கே.ரோசய்யா, வாழ்த்து தெரிவித்துள்ளார்.
 
இது குறித்து ஆளுநர் கே.ரோசய்யா வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி:
 
“ஆயுத பூஜை, விஜய தசமி திருநாளையொட்டி, தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா பகுதிகளைச் சேர்ந்த மக்களுக்கு எனது மனங்கனிந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
 
இந்த நன்னாளில் இந்தியாவைத் தூய்மையாக வைத்திருக்கவும், நம் நாட்டில் அறிவையும் மனிதப் பண்புகளையும் பாதுகாக்கவும் உறுதியேற்போம். இந்தியாவுக்கு அனைத்துத் துறைகளிலும் வளர்ச்சியையும், வளத்தையும், வெற்றியையும் இந்த நாள் கொண்டுவர வேண்டும்“. என்று தெரிவித்துள்ளார்.
 
முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:-
 
“வாழ்வுக்கு வளம் சேர்க்கக்கூடிய அறிவை அளிக்கும் கலைமகளாகவும், செல்வத்தைத் தரும் திருமகளாகவும், துணிவைத் தரும் மலை மகளாகவும் விளங்கும் அன்னையை, பெண்மையைப் போற்றி வணங்கும் விழா நவராத்திரி திருவிழா.
 
மக்களின் துன்பத்தை நீக்க எண்ணிய அன்னை சக்தி ஒன்பது நாள்கள் மகிஷாசுரன் என்ற அரக்கனுடன் போரிட்டு வதம் செய்த நாள் விஜயதசமி திருநாள்.
 
நவராத்திரி நாள்களில் தேவியர் மூவரையும் மனமார வணங்கினால் வீரம், செல்வம், கல்வி என அனைத்து நன்மைகளையும் பெறலாம்.
 
விஜயதசமி தினத்தன்று கல்வி, கலை, தொழில்கள் ஆகியவற்றை தொடங்கினால் வெற்றி நிச்சயம் என்பது நம்பிக்கை.
 
‘தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், தர்மம் மறுபடியும் வெல்லும்' என்பது இயற்கை நியதி. வெற்றி நிச்சயம் என்ற நம்பிக்கையோடு நாம் செயல்பட்டால் அதர்மம் என்னும் சூழ்ச்சி அகன்று தர்மம் நிலைநாட்டப்படும்.
 
தமிழக மக்கள் கல்வியிலும், செல்வத்திலும், துணிவிலும் சிறந்து விளங்க அனைவருக்கும் ஆயுத பூஜை, விஜயதசமி நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்“. என்று கூறியுள்ளார்.