1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J.Durai
Last Modified: மதுரை , புதன், 22 மே 2024 (16:26 IST)

ஆன்லைன் வர்த்தகத்தை, ஆட்சேபித்து விழிப்புணர்வு!

மதுரை யானைமலை ஒத்தக்கடையில், வணிகர் நலச் சங்கம் பேரவையின் 41-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, ஆன்லைன் வர்த்தகத்தை எதிர்த்து  இரட்டை மாட்டு வண்டி பந்தய விழிப்புணர்வு நடைபெற்றது.
 
போட்டி தொடக்க நிகழ்ச்சிக்கு, பொதுச் செயலாளர் இஸ்மாயில் தலைமை தாங்கினார். தலைவர் ரகுபதி, பொருளாளர் முனீஸ்வரன், துணைத் தலைவர் துரைராஜ் மற்றும் காவல் ஆய்வாளர் சுப்பையா ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
 
இந்த போட்டியில், 20-க்கும் மேற்பட்ட மாடுகள் பங்கேற்றன.
இந்த போட்டி, திருமோகூர் சாலையில் உள்ள தனியார் மண்டபம் அருகே தொடங்கி, திருவாதவூர் வரை எல்லை நிர்ணயிக்கப்பட்டு இருந்தது.
 
பந்தயத்தில் பெரிய மற்றும் சிறிய மாட்டு வண்டிகளில் பூட்டிய காளைகள் பந்தய எல்லையை நோக்கி சீறிப்பாய்ந்து ஓடின.
 
வெற்றி பெற்ற மாடுகளின் உரிமையாளர்களுக்கு ரூ.40 ஆயிரம் முதல் ரூ.7 ஆயிரம் வரை ரொக்க பரிசுகள் வழங்கப்பட்டது. இந்த போட்டியை காண, ஒத்தக்கடை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் வந்து இருந்தனர். 
 
இதில், மாட்டு வண்டியை ஓட்டுபவர்களை உற்சாகப்படுத்தும் வகையில், பார்வையாளர்கள் ஆரவாரம் செய்தனர். போட்டியின்போது, அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க யானைமலை ஒத்தக்கடை  போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.